இலங்கையில் உள்ள ஆசிரியர்களுக்கு வெளிநாட்டில் வேலைவாய்ப்பு: வெளியாகியுள்ள மகிழ்ச்சி தகவல்
மாலைதீவு அதிபர் மொஹமட் முய்ஸு இலங்கையிலிருந்து தகுதியான ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாலைதீவிலுள்ள அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் மாலைதீவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பெல்பொலகே ரங்க சுஜீவ குணவர்தன மொஹமட் முய்சுவிடம் நற்சான்றிதழ் பத்திரங்களை கையளிக்கும் போதே மாலைதீவு அதிபர் அதனை தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கையிடமிருந்து கல்வித் துறையில் கூடுதல் ஆதரவைப் பெற விருப்பம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு
மொஹமட் முய்ஸு மற்றும் உயர்ஸ்தானிகர் மாலைதீவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துதல், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் கல்வி மற்றும் சுகாதாரம் உட்பட இரு நாடுகளுக்கிடையிலான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் போன்ற விடயங்களை கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது மாலைதீவுக்கு தகுதியான ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதில் குறிப்பிட்ட முக்கியத்துவம் அளித்து, கல்வித் துறையில் கூடுதல் ஆதரவைப் பெறுவதற்கான தனது விருப்பத்தை மொஹமட் முய்ஸு தெரிவித்துள்ளார்.
மாலைதீவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் 26 ஜூலை 1965 இல் நிறுவப்பட்டமை குறிப்பிடத்தக்கது.