நாதஸ்வர மேதை கலாநிதி எம். பஞ்சாபிகேசனுக்கு சாவகச்சேரியில் கோலாகலமாக இடம்பெற்ற நூற்றாண்டு விழா
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தால் கலாநிதிப் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்ட நாதஸ்வர மேதை கலாநிதி எம். பஞ்சாபிகேசனனி;ன் நூற்றாண்டு விழா 01.07.2024 சாவகச்சேரியில் பல நூற்றுக்கணக்கான இசை ஆர்வலர்களின் பங்கேற்புடன் கோலாகலமாக இடம்பெற்றது.
மருத்துவர் எஸ்.எஸ். அருளானந்தம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சங்கத்தானை இராக்கச்சி அம்மன் ஆலயத்தின் முன்பாக அமைந்துள்ள பஞ்சாபிகேசன் வாழ்ந்த இல்லத்தில் அவரது திருவுருவச் சிலை திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறீசற்குணராசா பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சிலையைத் திரைநீக்கம் செய்து வைத்தார். தொடர்ந்து இராக்கச்சி அம்மன் ஆலயத்தில் இருந்து பஞ்சாபிகேசனின் திருவுருவப்படம் மங்கலப் பொருட்களுடன் நாற்பதுக்கும் மேற்பட்ட நாதஸ்வரத் தவில் கலைஞர்களின் இசை ஆராதனையுடன் சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்கு எடுத்துவரப்பட்டது.
நிகழ்வில் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் ஆசியுரையையும் ஆசிரியர் த. பரமானந்தம் தொடக்கவுரையையும் ஆற்றினர். பேராசிரியர் என். சண்முகலிங்கன், பேராசிரியர் அ. சண்முகதாஸ்., சட்டத்தரணி கே. சயந்தன், யாழ். பல்கலைக்கழக இசைத்துறை விரிவுரையாளர் கிருபாசக்தி கருணா ஆகியோர் சிறப்புரைகளை ஆற்றினர். நாதஸ்வரக்கலை பற்றிய சிறப்புக்கட்டுரைகளை உள்ளடக்கிய எம்பஞ்சாபிகேசன் என்ற நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டது. இதன் வெளியீட்டுரையை செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் வழங்கினார்.
நிகழ்வில் மூத்த நாதஸ்வரக் கலைஞர் பிச்சசையப்பா ரஜீவன், தவில் கலைஞர் தெட்சணாமூர்த்தி உதயசங்கர் ஆகியோர் பஞ்சாபிகேசன் நினைவு தங்கப்பதக்க விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். பஞ்சாபிகேசனுடன் நீண்டகாலம் பணியாற்றிய கலைஞர்கள் வரிசையில் தவில் வித்துவான் ச. முருகையா நாதஸ்வர வித்துவான் த. கோபாலசாமி ஆகியோர் பொற்கிளி வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
புகழ்பூத்த நாதஸ்வர தவில் வித்துவான்கள் பங்கேற்ற இரண்டு கச்சேரிகள், பஞ்சாபிகேசனின் பேர்த்தி இசையாசிரியர் நிருத்திகா சுஜீவனின் பாட்டு இந்துக் கல்லூரி மாணவிகளின் நடனம் எனப் பல நிகழ்வுகள்; இடம்பெற்றன. இந்துக் கல்லூரி அதிபர் வரவேற்புரையையும் கவிஞர் ச. மார்க்கண்டு கவி வாழ்த்தையும் வழங்கினர். நிகழ்வுகளை அதிபர் வை. விஜயகுமாரன் தொகுத்து வழங்கினார்.