பிரித்தானிய தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய திருப்பம்: முன்னாள் தலைவருக்கு உற்சாக வரவேற்பு
பிரித்தானிய தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய திருப்பமாக, கன்சர்வேட்டிவ் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் பிரித்தானிய பிரதமருமான போரிஸ் ஜான்சன் தேர்தல் பிரச்சாரத்தில் திடீரென பங்கேற்றார்.
பிரித்தானிய தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய திருப்பம்
பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றி பெற்று பிரதமராக மக்களால் தேர்வு செய்யப்பட்டவரான போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்ததன் பின்னணியில் இருந்தவர்களில், அவரால் உருவாக்கப்பட்ட ரிஷி சுனக்கும் ஒருவர் என தகவல் வெளியானது நினைவிருக்கலாம்.
அதைத் தொடர்ந்து இருவருக்குமிடையிலான உறவுகள் பாதிக்கப்பட்டன. மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ரிஷி, பிரித்தானிய பிரதமரானார்.
ஆனால், நடந்தவற்றையெல்லாம் மறந்து, யாரும் எதிர்பார்க்காத வகையில், திடீரென நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்டார் போரிஸ் ஜான்சன். கன்சர்வேட்டிவ் கட்சியினருக்கு ஆதரவாக அவர் பிரச்சாரம் செய்தார்.
என்னை இங்கு பார்ப்பது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம் என்று கூறிய போரிஸ் ஜான்சன், பிரதமர் ரிஷி என்னை பிரச்சாரத்துக்கு அழைத்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி, ஆகவே அவருக்கு மறுப்பு கூறாமல் நான் இங்கு வந்துள்ளேன் என்றார்.
மாற்றங்கள் ஏற்படுமா?
போரிஸ் ஜான்சனை ராஜினாமா செய்யவைத்ததும், ரிஷி மக்களால் தேர்தெடுக்கப்படாமலே பிரதமர் பதவியில் அமர்ந்ததும், அதைத் தொடர்ந்து நாட்டில் நிகழ்ந்த பல விடயங்களும் கன்சர்வேட்டிவ் கட்சியின் நீண்ட கால ஆதரவாளர்களுக்கு வருத்தத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், மீண்டும் அவர் பிரச்சாரத்துக்கு வந்துள்ளது தேர்தலில் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெரியவில்லை.
ஏனென்றால், போரிஸ் ஜான்சன் திடீரென பிரச்சாரத்துக்கு வருவதைக் கண்ட மக்கள், போரிஸ், போரிஸ் என உற்சாகக் குரல் எழுப்பியும், கைதட்டியும், விசில் அடித்தும் அவரை வரவேற்றனர். போரிஸ் ஜான்சனின் வருகை பொதுமக்களின் மன நிலையில் ஏதேனும் மாற்றத்தை ஏற்படுத்துமா? தேர்தல் முடிவுகள்தான் இந்தக் கேள்விக்கு பதில் சொல்லமுடியும்!