;
Athirady Tamil News

மேற்குக் கரையில் அபகரிக்கப்பட்ட நிலங்கள் இவ்வளவா? இஸ்ரேலின் வரம்பற்ற நடவடிக்கை!

0

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை பகுதியில் முப்பது ஆண்டுகளாக இல்லாதளவு ஒரே நாளில் மிகப்பெரும் நில அபகரிப்புக்கு இஸ்ரேல் ஒப்புதல் அளித்திருப்பது குறித்து பீஸ் நவ் என்கிற சமூக அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. நடைபெற்று கொண்டிருக்கும் காஸா போரின் பதற்றத்தை இந்த நடவடிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

ஜோர்டான் பள்ளத்தாக்கில் 12.7 சதுர கிமீ (ஏறத்தாழ 5 சதுர மைல்) அளவுக்கான நிலத்துக்கு அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளனர். 1993 ஆஸ்லோ ஒப்பந்தத்துக்கு பிறகான, ஒரே நேரத்தில் கையகப்படுத்தப்பட்ட மிகப்பெரும் நிலப்பரப்பு இதுவென பீஸ் நவ் அமைப்பு தெரிவித்துள்ளது.

அக்.7 போர் தொடங்கியதுமுதல் மேற்குக் கரை பகுதிகளில் இஸ்ரேல் ராணுவத்தின் சோதனையும் தாக்குதல்களுக்கும் இருதரப்புக்குமிடையேயான மோதலும் தொடர்ந்துவரும் நிலையில் இந்த நடவடிக்கை வெளிவந்துள்ளது.

கடந்த மாதமே நில அபகரிப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தாலும் புதன்கிழமை அதிகாரபூர்வமாக வெளிவந்துள்ளது. மேலும், மார்ச்சில் 8 சதுர கிமீ நிலமும் பிப்ரவரியில் 2.6 சதுர கிமீ நிலமும் இஸ்ரேலால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

மேற்குக் கரையில் அதிக நிலப்பரப்பை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளும் ஆண்டாக நடப்பாண்டை பீஸ் நவ் குறிப்பிடுகிறது.

இந்த ஆக்கிரமிப்பு நிலங்கள் மேற்குக் கரை நகரமான ரமல்லாவுக்கு வடகிழக்கில் அமைந்துள்ளன. மேற்குலக ஆதரவு பெற்ற பாலஸ்தீன அதிகார அமைப்பு மையம் கொண்டுள்ள இந்த பகுதியில் இஸ்ரேல் அரசு நிலங்களாக இதனை அறிவிப்பது என்பது இஸ்ரேலியர்களுக்கு அனுபவிக்க அனுமதிப்பதையும் பாலஸ்தீனர்களுக்கு உடைமை கொள்ள மறுப்பதையும் குறிக்கிறது.

ஆக்கிரமிப்பு மேற்குக் கரை பகுதியில் விரிவாக்கம் மேற்கொள்ளும் இஸ்ரேலின் இந்த நடவடிக்கை அமைதி ஒப்பந்தத்தை மீறுவதாகவும் சர்வதேச சமூகத்தின் விதிமுறைகள்படி சட்டத்திற்கு புறம்பானதாகவும் பாலஸ்தீனர்கள் கருதுகிறார்கள்.

மேற்கு கரை அகதிகள் முகாமில் இஸ்ரேல் வான்வழி தாக்குதலுக்கு பலியானவர்களை தூக்கிச் செல்லும் பாலஸ்தீனர்கள்

100-க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளை இங்கு இஸ்ரேல் கட்டமைத்துள்ளது. அவை சிறு நகரங்கள் போல காட்சியளிக்கின்றன. 5 லட்சத்துக்கும் அதிகமான யூதர்களுக்கு அவை குடியிருப்பாக உள்ளன. அவர்கள் இஸ்ரேலின் குடியுரிமை பெற்றவர்கள்.

மேலும் 30 லட்சத்துக்கு அதிகமான பாலஸ்தீனர்கள் வரம்பற்ற இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு கரையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.