267 கிலோ தங்க கடத்தல் – சென்னை ஏர்போர்ட்டில் கடை திறந்த யூடியூபர் ; ஆடி போன சுங்கத்துறை
சென்னை விமான நிலையத்தில் 167 கோடி ரூபாய் மதிப்பில் 267 கிலோ தங்கத்தைக் கடத்திய கும்பல் சிக்கியுள்ளது.
சென்னை விமான நிலையம்
சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக தங்கம் கடத்தும் செயல்கள் அதிக அளவில் நடைபெற்று வருவதாகவும் குறிப்பாக சென்னை சர்வதேச விமான நிலைய புறப்பாடு பகுதியில் பரிசுப் பொருட்கள் விற்பனை செய்யும் ஒரு கடையை மையமாக வைத்து இந்தக் கடத்தல் நடப்பதாகவும் தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சுங்கதுறை அதிகாரிகள் விமான நிலையத்தை தீவிரமாக கண்காணித்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டிரான்சிட் பயணியாக துபாயில் இருந்து விமானத்தில் சென்னைக்கு வந்துவிட்டு சென்னையில் இருந்து மற்றொரு விமானத்தில் இலங்கை செல்ல இருந்த இலங்கையைச் சேர்ந்த சுமார் 30 வயது ஆண் பயணி ஒருவர் மீது சுங்கத்துறைக்கு சந்தேகம் ஏற்பட்டது.
உடனே அவர் விமான நிலையத்தில் உள்ள கழிவறைக்கு சென்று விட்டு வெளியில் வந்ததால் அந்த கழிவறையில் சோதனை இட்டபோது அங்குள்ள தண்ணீர் தொட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பார்சல்களில் ஒரு கோடி மதிப்புடைய 1.6 கிலோ தங்கத்தை சுங்கத்துறை கைப்பற்றினர்.
சபீர் அலி
இதையடுத்து சுங்க அதிகாரிகள் இலங்கை பயணியை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சென்னை விமான நிலையத்தில் பரிசு பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஓனர் சபீர் அலி, அவர் கடையில் பணியாற்றும் 7 ஊழியர்கள் ஆகிய 9 பேரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சென்னையை சேர்ந்த 29 வயதான சபீர் அலி யூடியூப் சேனல் நடத்தி வந்துள்ளார். அதன் மூலம் அவருக்கு அபுதாபியில் உள்ள இலங்கையை சேர்ந்த தங்கம் கடத்தும் கும்பல் தொடர்பு கொண்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் சில்லறை கடைகள் குத்தகை விடும் உரிமையை தனியார் நிறுவனம் ஒன்று வைத்துள்ளது.
இந்த தனியார் நிறுவனத்திடம் பல லட்சம் கொடுத்து ஏர்ஹப் என்ற கடை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை சபீர் அலிக்கு இலங்கை கும்பல் பெற்றுக் கொடுத்துள்ளது. ஏர்ஹப் என்பது பொம்மைகள், நினைவுப் பொருட்கள் மற்றும் ஹேண்ட் பேக்குகளை விற்பனை செய்யும் கடையாகும்.
தீவிர விசாரணை
இந்த கடையில் 7 பேரை வேலைக்கு அமர்த்தியுள்ளார். சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி பீரோ ஆஃப் சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி (பிசிஏஎஸ்) வழங்கிய அடையாள அட்டைகள் இருந்துள்ளன. இந்த அடையாள அட்டைகள் காரணமாக, அவர்கள் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை.
சென்னை ஏர்போர்ட்டில் transit பயணிகளாக வருவோர் கடத்தல் தங்கத்தைவிமான நிலைய கழிவறையில் வைத்து விட்டு சபீர் அலியிடம் தகவல் தெரிவிப்பார்கள். தன் கடை ஊழியர்களை அனுப்பி எந்த சோதனையிலும் சிக்காமல் அந்த தங்கத்தை எடுத்து வந்து சபீர் அலியிடம் கொடுத்து விடுவார்கள்.
இதற்காக, கடந்த 2 மாதங்களில் சுமார் ரூ 167 கோடி ரூபாய் மதிப்புள்ள 267 கிலோ தங்கத்தைக் கடத்த உதவியுள்ளனர். இதற்காக அவர்களுக்கு சுமார் 3 கோடி ரூபாய் வரை கமிஷன் கிடைத்துள்ளது. இந்த கடத்தலில் விமான நிலைய அதிகாரிகளுக்கு தொடர்புள்ளதா? வேறு யாரெல்லாம் இந்த கடத்தலுக்கு உடந்தையாக இருந்துள்ளார்கள் என்ற கோணத்தில் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.