;
Athirady Tamil News

கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபராக எஸ்.முரளிதரன் கடமைகளை பொறுப்பேற்பு!

0

கிளிநொச்சி மாவட்டத்திற்கான நிரந்தர பதில் அரசாங்க அதிபராக எஸ்.முரளிதரன் அவர்கள் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று(04) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றி வந்த எஸ்.முரளிதரன், முன்னாள் அரசாங்க அதிபரான றூபவதி கேதீஸ்வரன் ஓய்வு பெற்றுச்சென்ற பின்னர், 15.03.2024ம் திகதியிலிருந்து கடமை நிறைவேற்று அரசாங்க அதிபராக பணியாற்றி வந்தார்.

தொடர்ந்து அமைச்சரவை அனுமதிக்கமைவாக கிளிநொச்சி மாவட்டத்தின் நிரந்தர பதில் அரசாங்க அதிபராக எஸ்.முரளிதரன் அவர்கள் நியமிக்கப்பட்டு, அவருக்கான நியமனக்கடிதம் நேற்று(03) பிரதமர் தினேஷ்குணவர்தன அவர்களினால் பிரதமர் செயலகத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிலையில் கிளிநொச்சி மாவட்ட நிரந்தர பதில் அரசாங்க அதிபராக எஸ்.முரளிதரன் அவர்கள் இன்றைய தினம்(04) தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இன்று காலை சிவில் அமைப்பினர் மற்றும் சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளால் கிளிநொச்சி நரில் அமைந்துள்ள அருள்மிகு சிவசித்தி விநாயகர் ஆலயத்திலிருந்து மங்கள வாத்தியங்களுடன் கௌரவத்துடன் அழைத்து வரப்பட்டார்.

தொடர்ந்து கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர்(காணி) உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் என பலர் வரவேற்றதோடு அலுவலகத்தில் தனது கடமையினை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

மேலும், இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தவர்கள் கிளிநொச்சி மாவட்ட நிரந்தர பதில் அரசாங்க அதிபரான எஸ்.முரளிதரன் அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டனர்.

இலங்கை நிர்வாக சேவை அதிகாரியான இவர் தெல்லிப்பளை, சண்டிலிப்பாய் ஆகிய பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளராகவும், யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி), கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக பதவி வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி), பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்ட செயலாளர், கிளை தலைவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.