யாழில் இடம்பெற்ற சுற்றிவளைப்பில் அறுவர் கைது
யாழ்ப்பாணம் (Jaffna) – வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் இன்று (04) அதிகாலையிலிருந்து மருதங்கேணி பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 40 பேர் வரையான பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது, கைது செய்யப்பட்ட அனைவரும், வாள் வெட்டில் ஈடுபடுதல், சட்டவிரோத கசிப்பு உற்பத்தி விற்பனை போன்ற பல்வேறு குற்ற செயல்களுடன் தொடர்புபட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆலய திருவிழா
மேலும், மருதங்கேணி பொலிஸார் கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதுடன் அவர்களை நீதிமன்றத்தில் உரிய சட்ட நடவடிக்கைகளுக்காக முற்படுத்தவுள்ளனர்.
அதேவேளை, நேற்று பிற்பகல் குடத்தனை வடக்கு பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் மாலை ஆறு மணி முதல் திருவிழா இடம் பெற்றுள்ளதுடன் இரவு பத்து மணியிலிருந்து இசைக்கச்சேரி இடம்பெற்றுள்ளது.
இதன்போது, அங்கு இடம்பெற்ற வன்முறைகளில் வாகனம் ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாகவும், இதில் அவ் வாகனம் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் இசை நிகழ்ச்சி இடை நிறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.