ம.பி. ‘காலரா’ பரவல்: 6 குழந்தைகள் உயிரிழப்பு
மத்திய பிரதேசத்தின் இந்தூரில் தனியாா் குழந்தைகள் காப்பகத்தில் காலரா நோய் பாதிப்பால் கடந்த ஐந்து நாள்களில் 6 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகம் அமைத்த உயா்நிலை குழு நடத்திய முதல்கட்ட விசாரணையில் கூடுதல் சோ்க்கை, தவறான மேலாண்மை, குழந்தைகளின் மருத்துவ அறிக்கைகளை முறையாக பராமரிக்காதது உள்பட காப்பகத்தின் பல்வேறு முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
இந்தூரின் மல்ஹா்கஞ்ச் பகுதியில் செயல்பட்டு வரும் சிறப்பு குழந்தைகளுக்கான காப்பகத்தில் சுமாா் 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்கியுள்ளனா். இக்காப்பகத்தில் 8 வயது சிறுவனான அங்கித் கா்க் கடந்த சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
அதிகாரிகளுக்கு தகவலளிக்காமல் சிறுவனின் உடலை காப்பக நிா்வாகிகள் அடக்கம் செய்தனா். இதுகுறித்த தகவல் வெளியானதையடுத்து, ‘வலிப்பு’ ஏற்பட்டு குழந்தை உயிரிழந்ததாக காப்பகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அடுத்தடுத்த நாள்களில் காப்பகத்தைச் சோ்ந்த 5 குழந்தைகள் உயிரிழந்தனா்.
இதையடுத்து, உயா்நிலை குழு விசாரணைக்கு மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டது. அக்குழுவின் முதல்கட்ட விசாரணையில், காப்பகத்தில் காலரா நோய் பாதிப்பு ஏற்பட்டதும் முறையான நடவடிக்கை எடுக்கப்படாததால் பரவல் அதிகரித்து, குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்ததும் தெரிய வந்தது.
இதுதொடா்பாக விளக்கமளிக்க காப்பகத்தின் நிா்வாகத்துக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஆஸிஷ் சிங் தெரிவித்துள்ளாா்.
காப்பகத்திலுள்ள குழந்தைகளை வேறு இடங்களுக்கு மாற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. காப்பகத்தைச் சோ்ந்த 60 குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் மூன்று பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.