அதிபர் தேர்தல் நடைபெறுமா..! எழுந்துள்ள சட்ட சிக்கல்
அதிபர் தேர்தல் முறையாக நடைபெறுமா அல்லது நீதிமன்ற நடவடிக்கை காரணமாக ஒத்திவைக்கப்படுமா என கூற முடியாது என ஜமைக்கா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் சட்டத்தரணியுமான பிரதிபா மஹாநாமஹேவா தெரிவித்தார்.
அதிபர் தேர்தல் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாத பின்னணியில் உச்ச நீதிமன்றில் மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதால், அதன் முடிவு வரும் வரை எதனையும் தீர்மானிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றம்
அதிபரின் பதவிக்காலம் முடிவடையும் திகதி தொடர்பில் உச்ச நீதிமன்றம் விளக்கமளிக்கும் வரையில் தற்போது திட்டமிட்டபடி அதிபர் தேர்தலை நடத்துவதைத் தடுக்க இடைக்கால உத்தரவைக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று (03) தாக்கல் செய்யப்பட்டது.
அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் ஊடாக அதிபரின் பதவிக் காலம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட திருத்தம் தொடர்பான மனுவின் ஊடாக அதிபரின் பதவிக்காலம் முடிவடையும் திகதி தொடர்பில் தெளிவற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
1978 அரசியலமைப்பின் கீழ் தெரிவு செய்யப்பட்ட அதிபரின் பதவிக் காலம் 06 வருடங்கள் என கூறப்பட்ட போதிலும், அரசியலமைப்பின் 30-இரண்டாம் சரத்து அரசியலமைப்பின் 19வது திருத்தத்தின் 03வது அத்தியாயத்தின் ஊடாக திருத்தப்பட்டுள்ளது.
அதிபரின் பதவிக்காலம்
இருந்த போதிலும் அதிபரின் பதவிக்காலம் 05 வருடங்களிலா அல்லது 06 வருடங்களிலா முடிவடைவது என்பது தொடர்பில் பிரச்சினை எழுந்துள்ளதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் அதிபராக தெரிவு செய்யப்பட்ட கோட்டாபய ராஜபக்ச பதவி விலகிய பின்னர் தற்போதைய அதிபர் ரணில் பதவியேற்றார். இதன்படி தற்போதைய அதிபரின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில் அதிபர் தேர்தலை நடத்த வேண்டிய திகதிகள் தொடர்பில் அரசியலமைப்பு ரீதியில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசியலமைப்பின் பிரகாரம் எதிர்வரும் 17ஆம் திகதிக்கு பின்னர் அதிபர் தேர்தலை அறிவிக்கும் அதிகாரம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.