;
Athirady Tamil News

பிரித்தானிய பொதுத்தேர்தலில் தொழிலாளர் கட்சிக்கு வெற்றி

0

புதிய இணைப்பு
நடந்து முடிந்த பிரித்தானிய பொதுத்தேர்தலில் தொழிலாளர் கட்சி மகத்தான வெற்றியை பெற்றுள்ளதோடு அக்கட்சி 410 ஆசனங்களை பெறும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, தொழிலார் கட்சியின் தலைவர் கெய்ர் ஸ்டார்மர் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ளார்.

தொழிலாளர் கட்சி வெற்றி பெற தேவையான 326 ஆசனங்களை எட்டிய பிறகு, கட்சி ஆதரவாளர்களிடம் கெய்ர் ஸ்டார்மர் உரையாற்றியுள்ளார்.

வாக்களித்த மக்களுக்கு நன்றி கூறிய அவர், இது ஒரு பெரிய பொறுப்பு எனவும் நீங்கள் எங்கள் நாட்டை மாற்றிவிட்டீர்கள் எனவும் கூறியுள்ளார்.

இரண்டாம் இணைப்பு
பிரித்தானிய பொதுத்தேர்தல் தற்போது முடிவடைந்துள்ள நிலையில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி தற்போது முன்னிலை வகித்து வருகிறது.

தற்போது வரை கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) தலைமையிலான தொழிலாளர் கட்சி 43 ஆசனங்களையும் ரிஷி சுனக் (Rishi Sunak ) தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி இரண்டு ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.

மொத்தமாக 650 நாடாளுமன்ற ஆசனங்களை கொண்ட பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இந்த முறை தொழிலாளர் கட்சி பெரும்பாண்மையான ஆசனங்களை கைப்பற்றி ஆட்சியமைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

முதலாம் இணைப்பு

இங்கிலாந்தின் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி,தற்போதைய கன்சர்வேடிவ் கட்சியை வீழ்த்தி, மிகப்பெரிய நாடாளுமன்ற பெரும்பான்மையை வெல்லும் என, வாக்களிப்பு முடிந்த பிறகு வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

கெய்ர் ஸ்டார்மர் பிரித்தானியாவின் அடுத்த பிரதமராக வருவார் என்றும், அவரது தொழிற்கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் பெரும்பான்மையுடன் வெற்றிபெறும் என்றும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ்கள் வரலாற்று இழப்புகளை சந்திக்க நேரிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

14 ஆண்டுகால ஆட்சி

இதன்மூலம் தற்போது பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சியின் 14 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மந்தமான பொருளாதார வளர்ச்சி, நிறுவனங்கள் மீதான நம்பிக்கை குறைந்து வருவது மற்றும் மோசமடைந்து சமூக கட்டமைப்பு போன்றவற்றினால் இத்தேர்தலில் கேர் ஸ்டார்மெர் தலைமையிலான தொழிலாளா் கட்சிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்யவிருப்பவரைத் தீர்மானிக்கும் இந்தத் தோ்தலில் 650 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு வாக்களிப்பு நடைபெற்றுள்ளது.

கடந்தாண்டில் நாடாளுமன்றத் தொகுதி எல்லைகள் திருத்தியமைக்கப்பட்டதோடு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து வெளியேறிய பின்னர் நடைபெறும் முதல் பொதுத்தோ்தல் இதுவாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.