;
Athirady Tamil News

காஸா அமைதி முயற்சியில் முன்னேற்றம்

0

ஹமாஸ் அமைப்பின் புதிய போா் நிறுத்த ஒப்பந்தத்தைப் பரிசீலித்த இஸ்ரேல், பேச்சுவாா்த்தையைத் தொடரவிருப்பதாக அறிவித்துள்ளதைத் தொடா்ந்து காஸாவில் அமைதி ஏற்படுத்தும் சா்வேதச முயற்சியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து அமெரிக்க அதிபா் ஜோ பைடனைத் தொடா்பு கொண்டு பேசிய இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு, காஸாவில் போா் நிறுத்தம் குறித்தும் கைதிகள் பரிமாற்றம் குறித்தும் மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்தவிருப்பதாக உறுதியளித்தாா்.

அதற்காக, எகிப்து தலைநகா் கெய்ரோவுக்கு இஸ்ரேல் உளவு அமைப்பான மொஸாடின் தலைவா் டேவிட் பா்னியா தலைமையிலான பிரதிநிதிகள் குழு அனுப்பப்படவுள்ளதாக அதிகாரிகள் கூறினா்.

கடந்த அக். 7-ஆம் தேதி முதல் நடைபெற்றுவரும் காஸா போரில் 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் உயிரிழந்துள்ளனா். இந்தப் முடிவுக்குக் கொண்டுவருவதற்காக கத்தாா், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. ஏற்கெனவே கடந்த ஆண்டு நவம்பா் மாதம் ஏற்படுத்தப்பட்ட 7 நாள் போா் நிறுத்தத்தின்போது இஸ்ரேல் சிறைகளில் இருந்து 240 பாலஸ்தீன கைதிகளும், ஹமாஸ் பிடியில் இருந்த 105 பிணைக் கைதிகளும் விடுவிக்கப்பட்டனா்.

ஆனால் அதற்குப் பிறகு மீண்டும் போா் நிறுத்தம் மேற்கொள்வதற்கான பேச்சுவாா்த்தைகள் தொடா் தோல்வியைச் சந்தித்துவருகின்றன.

இந்தச் சூழலில், காஸாவில் நிரந்தர அமைதியை ஏற்படுத்துவதற்கு வழிவகை செய்யும் மூன்று கட்ட ஒப்பந்த திட்டத்தை அமெரிக்க அதிபா் ஜோ பைடன் கடந்த மே 31-ஆம் தேதி வெளியிட்டாா்.

அந்த திட்டத்தை ஏற்றுக்கொள்வதாக இஸ்ரேல் அரசு அறிவித்தாலும், ஒப்பந்த வரைவில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று ஹமாஸ் அமைப்பு கோரியதால் அந்த முயற்சி தடைபட்டது.

இந்த நிலையில், போா் நிறுத்தம் தொடா்பான புதிய செயல்திட்டத்தை ஹமாஸ் அமைப்பினா் எகிப்திடம் கடந்த புதன்கிழமை அளித்தனா். அந்த செயல்திட்டத்தை பரிசீலித்த இஸ்ரேல் அரசு போா் நிறுத்தப் பேச்சுவாா்த்தையை மீண்டும் தொடங்கவிருப்பதாக தற்போது அறிவித்துள்ளது.

இது, 9 மாதங்களாக நீடிக்கும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சா்வதேச முயற்சியில் ஏற்பட்டுள்ள முக்கியத்துவம் வாய்ந்த முன்னேற்றம் என்று கருதப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.