தமிழ்த் தேசிய அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஆளுமை சம்பந்தர் – யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் அஞ்சலி
தமிழ்த் தேசிய அரசியல் வரலாற்றில்
தவிர்க்க முடியாத ஆளுமை சம்பந்தர்
– யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் அஞ்சலி
……..
ஈழத்தமிழர்களின் அரசியல் வேணவாக்களை மிதவாதப் போக்குடன் கையாண்ட தலைவர்களுள் மிக முக்கியமானவர் காலஞ்சென்ற இரா.சம்பந்தன் அவர்கள். இலங்கையின் சுதந்திரத்துக்குப் பின்னர் ஈழத்தமிழர்கள் முன்வைத்த அரசியல் கோரிக்கைகளை முன்கொண்டு சென்றதில் சம்பந்தர் அவர்களின் பங்களிப்பும் கனதியான இடத்தை வகிக்கின்றது என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பெருந்தலைவர் இரா. சம்பந்தனின் மறைவு குறித்து யாழ்ப்பாண தமிழ்ச் சங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது
அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு ஈழத்தமிழர் பேராட்டத்துக்கு முன்னான அரசியல், போராட்ட காலத்திலான அரசியல், போராட்டத்துக்குப் பின்னான அரசியல் என மூன்று தளங்களிலும் சர்வதேசத்தால் நன்கு அறியப்பட்ட அரசியல் தலைவர் இரா.சம்பந்தர் ஆவார்.
அவரது தலைமைத்துவத்தில் தமிழ்த் தேசிய பரப்பில் பல சவால்கள் எதிர் கொள்ளப்பட்டுள்ளன. சவால்கள் தோன்றும் போதெல்லாம் அவற்றின் உடனடி விளைவுகளை மையப்படுத்தி தீர்வுகளை அணுகாது தனது மென்போக்கு அணுகுமுறையினால் சவால்களை மாற்றுவழிகளில் கையாண்டவர் அவர். அந்தப் போக்கு அவரது தனித்துவ இயல்பாக மற்றவர்களால் கணிக்கப்பட்டது.
குடியரசுக் காலத்துக்குப் பின்னர் இலங்கைப் பாராளுமன்றத்தில் அதிக காலம் அங்கத்துவம் வகித்த தமிழ்த் தலைவர் எனும் பெருமையையும் இரண்டாவது தமிழ் எதிர்க்கட்சித் தலைவர் எனும் பெருமையும் அவர் பெறுகின்றார். ஈழத் தமிழர்களின் வாழ்வியல் பூர்விகமான வடக்கு கிழக்கு மண்ணை இணைத்து இரண்டு தரப்புக்களும் மதிப்புணர்வுடன் அணுகிய தலைவராக பார்க்கப்படுகிறார்.
இன்று காலமூப்பினால் அவர் இவ்வுலக வாழ்வை நீத்துள்ளார். அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதுடன் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் சார்பிலான அஞ்சலிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
…………………………..
ச.லலீசன்
பொதுச் செயலாளர்
யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம்
0773787358
பேராசிரியர் தி. வேல் தமபி
தலைவர்
யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம்
பேராசிரியர் அ. சண்முகதாஸ்
பெருந்தலைவர்
யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம்