குழந்தைக்கு கல்லீரல் தானம் அளித்த தாய்!
கேரள மருத்துவர்கள் ஐந்து வயது குழந்தைக்கு வெற்றிகரமாக கல்லீரல் அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.
கேரளத்தில் ஐந்து வயது குழந்தைக்கு கல்லீரலில் நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தது. இதனால், பாதிக்கப்பட்ட குழந்தை கோட்டயம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ஆனால், குழந்தைக்கு கல்லீரலில் அறுவை சிகிச்சை செய்வது என்பது சிக்கலாக இருக்கும் என்று மருத்துவர் குழு தெரிவித்தனர். இருப்பினும், குழந்தையின் தாயான 25 வயது பெண், தன்னுடைய கல்லீரலைத் தானமாகத் தருவதாக ஒப்புக்கொண்டு, குழந்தைக்கு சிகிச்சை அளிக்குமாறு மருத்துவமனையில் கோரியிருந்தார்.
குழந்தையின் தாய் அளித்த கோரிக்கையை ஏற்ற மருத்துவமனை, இரைப்பை அறுவை சிகிச்சைத் துறையின் தலைவர் டாக்டர் ஆர்.எஸ். சிந்துவின் தலைமையில், குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
குழந்தைக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டதையடுத்து, சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் “அரசு மருத்துவமனைகளில் குழந்தை கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் மிகவும் அரிதானவை; நேரடி அறுவை சிகிச்சை மிகவும் சிக்கலான செயல்முறை. இருப்பினும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் வெற்றிகரமாக சிகிச்சையை முடித்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.