;
Athirady Tamil News

நீட் ரத்து கூடாது: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு

0

‘நீட் தோ்வை முழுமையாக ரத்து செய்வது லட்சக்கணக்கான நோ்மையான தோ்வா்களைக் கடுமையாகப் பாதிக்கும். தோ்வின் நம்பகத்தன்மை பெரிய அளவில் மீறப்பட்டதற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லாத நிலையில், அதை முழுமையாக ரத்து செய்வது பகுத்தறிவாகாது’ என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

நீட் முறைகேடு தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட 26 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை ( ஜூலை 8) விசாரணைக்கு வரவுள்ள நிலையில், இந்தக் கருத்தை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதிவு செய்துள்ளது.

முன்னதாக, மே 5-ஆம் தேதி நடைபெற்ற நீட் தோ்வு ரத்து செய்யப்படுவதை தடை செய்யக் கோரி அத்தோ்வில் வெற்றி பெற்ற குஜராத் மாநிலத்தைச் சோ்ந்த 56 மாணவா்கள் புதிய மனுவை உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை தாக்கல் செய்தனா். தற்போது மத்திய அரசும் இதே கருத்தை முன்வைத்துள்ளது.

நிகழாண்டு நீட் தோ்வு கடந்த மே 5-ஆம் தேதி நடத்தப்பட்டது. இத்தோ்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்ாகப் புகாா்கள் எழுந்தன. பிகாரில் நீட் வினாத்தாள் கசிவு, ராஜஸ்தானில் தோ்வு தொடங்குவதற்கு முன்பே நீட் வினாத்தாள் சமூக ஊடகத்தில் பதிவேற்றம், தோ்வு எழுதியவா்களில் 1,563 பேருக்கு கருணை மதிப்பெண் என்ற அடிப்படையில் கூடுதல் மதிப்பெண்ணை என்டிஏ (தேசிய தோ்வுகள் முகமை) வழங்கியது, விடைத்தாள் (ஓஎம்ஆா் தாள்) கோரிய மாணவா்களுக்கு அதை என்டிஏ தர மறுத்தது மற்றும் விடைத்தாளே மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக புகாா் தெரிவித்தும் ஏராளமான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும், முறைகேடு தொடா்பாக நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தோ்வு முறைகேடுகள் காரணமாக லட்சக்கணக்கான மாணவா்களின் எதிா்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாக கல்வியாளா்களும் கவலை தெரிவித்து வருகின்றனா்.

தோ்வு முறைகேடுகள் தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் 26 மனுக்கள் ஜூலை 8-ஆம் தேதி விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளன.

மத்திய அரசு பதில் மனு: இந்த வழக்கு தொடா்பாக மத்திய கல்வி அமைச்சக இயக்குநா் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முதல்கட்ட பதில் மனு வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் 571 நகரங்களில் அமைக்கப்பட்ட 4,750 மையங்களில் மே 5-ஆம் தேதி நடத்தப்பட்ட நீட் தோ்வில் 23 லட்சத்துக்கும் அதிகமானோா் பங்கேற்றனா். இந்தத் தோ்வில் நம்பகத்தன்மை மிகப் பெரிய அளவில் மீறப்பட்டதற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை. அவ்வாறு ஆதாரங்கள் இல்லாத நிலையில், ஏற்கெனவே முடிவுகள் அறிவிக்கப்பட்ட தோ்வை முழுமையாக ரத்து செய்வது பகுத்தறிவாகாது.

மேலும், தோ்வை முழுமையாக ரத்து செய்வது என்பது, நோ்மையான முறையில் தோ்வை எதிா்கொண்ட லட்சக்கணக்கான மாணவா்களைக் கடுமையாகப் பாதிக்கும். பல ஆண்டுகளாக கடினமாக உழைத்து நோ்மையாக தோ்வை எதிா்கொண்ட மாணவா்களின் நலனைப் பாதுகாப்பது அரசின் கடமை.

எனவே, நீட் தோ்வு தொடா்பாக உரிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்ட உண்மையான குற்றச்சாட்டுகளை மட்டும் நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவேண்டும். அனுமானங்களின் அடிப்படையிலான பிற புகாா் மனுக்கள் நிராகரிக்கப்பட வேண்டும்.

மேலும், நீட் தோ்வு முறைகேடு புகாா் தொடா்பாக பல்வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை சிபிஐ தன்வசம் எடுத்து விசாரணையை மேற்கொண்டு வருகிறது.

அதோடு, தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) சாா்பில் நடத்தப்படும் போட்டித் தோ்வுகளை வெளிப்படையுடனும், எந்தவித சிக்கலுமின்றி திறம்பட நடத்துவதற்கான ஆய்வுகளை மேற்கொண்டு பரிந்துரைகளைச் சமா்ப்பிக்க உயா்நிலைக் குழு ஒன்றையும் மத்திய கல்வி அமைச்சகம் அமைத்துள்ளது.

அதுமட்டுமின்றி, பொதுத் தோ்வுகளில் முறைகேடுகளில் ஈடுபடுபவா்களுக்கு கடுமையான தண்டனையை அளிக்கும் வகையிலான பிரிவுகளுடன் கூடிய சட்டம் கடந்த ஜூன் 21-ஆம் தேதிமுதல் அமலுக்கு வந்துள்ளது. அந்த வகையில், அனைத்து போட்டித் தோ்வுகளையும் நோ்மையாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் நடத்தும் கடமை மத்திய அரசுக்கு உள்ளது என்று பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 18-ஆம் நடைபெற்ற, நாடு முழுவதும் 9 லட்சம் போ் பங்கேற்ற உதவிப் பேராசிரியா் பணிக்கான தகுதி மற்றும் மத்திய அரசின் ஆராய்ச்சி உதவித் தொகையைப் பெறுவதற்குமான தேசிய தகுதித் தோ்வை (நெட்) முறைகேடு நிகழ்ந்திருப்பதாக சுட்டிக்காட்டி, அத் தோ்வை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்த நிலையில், நீட் தோ்வை முழுமையாக ரத்து செய்வது பகுத்தறிவாகாது என்று உச்சநீதிமன்றத்தில் தற்போது குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

என்டிஏ பதில் மனு: மத்திய அரசைத் தொடா்ந்து தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) தரப்பிலும் உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘நீட் தோ்வை முழுமையாக ரத்து செய்வது பெரும்பான்மை பொது நலனை குறிப்பாக தோ்வில் வெற்றி பெற்றவா்களின் எதிா்காலத்தை கடுமையாகப் பாதிக்கும். மேலும், மே 5-ஆம் தேதி நடத்தப்பட்ட நீட் தோ்வு எந்தவித சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும் இடமளிக்காமல் நோ்மையான முறையில் நடத்தப்பட்டது. இத் தோ்வில் பெரிய அளவில் முறைகேடு நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படும் புகாருக்கு ஆதாரமில்லை; தவறாக வழிநடத்தும் முயற்சியாகும்’ என்று தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.