;
Athirady Tamil News

சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம்: நாளை முடங்கவுள்ள ஏ9 வீதி

0

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் (Chavakachcheri Base Hospital) சிகிச்சை நடவடிக்கைகளை இன்று தொடங்காவிட்டால் நாளைய தினம் சுயாதீனமாக ஏ9 வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த வைத்தியசாலையின் வைத்திய அட்சகரின் நியமனம் குறித்து கடந்த சில நாட்களாக குழப்பமான சூழ்நிலை நிலவுகின்ற நிலையில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) இன்று வைத்தியசாலைக்கு விஜயம் செய்திருந்தார்.

இந்த நிலையில் அங்கு கூடியிருந்த போதே பொதுமக்கள் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளனர். அவர்கள் தொடர்ந்தும் தெரிவிக்கையில் “வைத்தியசாலை சிகிச்சை நடவடிக்கைகளை இன்று ஆரம்பிக்காவிட்டால் நாளை ஏ9 வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபடுவோம்.

பொதுமக்கள் பாதிப்பு
யாரையும் வலுக்கட்டாயமாக அழைக்காமல் பொதுமக்கள் அனைவரும் விருப்பத்துடன் இணைந்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

மேலும் இந்த வைத்தியருக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கி வைத்தியசாலையை இயங்க வைக்க வேண்டும் என பொதுமக்கள் விரும்புகின்றோம்.

வைத்தியர்கள் தங்களுடைய தனிப்பட்ட தொழிற்சங்கப் பிரச்சினைக்காக பொதுமக்களை பாதிக்க விடக் கூடாது. அண்மையில் நாடளாவிய ரீதியில் வைத்தியசாலை ஊழியர்கள் சம்பளப் பிரச்சினையை முன்னிறுத்தி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன் தொடர்ச்சியாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் முன்னெடுக்கப்படும் பணிப் புறக்கணிப்பினால் வைத்தியசாலை வெறிச்சோடி யுத்தம் நடந்த பூமி போன்று காட்சியளிக்கின்றது. உள்நாட்டு யுத்தத்திலும் இந்த வைத்தியசாலை மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது.

சுயாதீனமாக போராட்டம் இடம்பெறும்
சாவகச்சேரி வைத்தியசாலையில் 25 வைத்தியர்கள் பணியாற்றுகின்றார்கள் என்பதை நாங்கள் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட பின்னர் தான் அறிந்தோம். பொது மக்கள் யாருக்கும் இந்த விடயம் தெரிந்திருக்காது.

ஏனெனில் நாங்கள் வெளிநோயாளர் பிரிவிற்கு வரும் போது ஒன்று அல்லது இரண்டு வைத்தியர்கள் இருப்பார்கள். விடுதியில் தங்க வைத்திருந்தால் காலையில் ஒரு வைத்தியர் மாலையில் ஒரு வைத்தியர் வந்து பார்வையிடுவார்.

25 வைத்தியர்கள் பணியாற்றுகின்ற ஒரு வைத்தியசாலையை முடக்கி வைத்துக்கொள்வதென்பது தென்மராட்சி பொதுமக்கள் என்ற ரீதியில் ஏற்றுக்கொள்ள முடியாது.

இன்று இந்த வைத்தியசாலை நடவடிக்கைகளை தொடங்காவிட்டால் நாளை சுயாதீனமாக போராட்டம் ஒன்றை முன்னெடுப்போம்.“ என தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.