15வது முறையாக முழு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பிரித்தானியப் பெண்
பிரித்தானியாவில் குறைமாத பெண் குழந்தையை கொல்ல முயன்ற வழக்கில் முன்னாள் செவிலியர் ஒருவருக்கு முழு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளி என உறுதி
தற்போது 34 வயதாகும் லூசி லெட்பி ஏற்கனவே 7 குழந்தைகளை கொலை செய்ததாகவும், 6 குழந்தைகளை கொலை செய்ய முயன்ற வழக்கிலும் தண்டனைப் பெற்று சிறையில் உள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் மற்றும் ஜூன் 2016 க்கு இடையில் செஸ்டர் மருத்துவமனையில் குறித்த கொடூர சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. இந்த வார தொடக்கத்தில் மறுவிசாரணை நீதிபதி ஒருவர் அவரை குறைமாத சிசுவை கொலை செய்ய முயன்ற வழக்கில் குற்றவாளி என உறுதி செய்துள்ளார்.
ஆனால் இந்த வழக்கில் தாம் குற்றமற்றவர் என்றே லூசி லெட்பி முறையிட்டுள்ளார். அந்த சிசுவை செவிலியர் லூசி லெட்பி எவ்வாறு இலக்கு வைத்து தாக்க முயன்றார் என்பதும் நீதிமன்ற விசாரணையில் அம்பலமானது.
அந்த சிசு பிறந்து 90 நிமிடங்களில் லூசி லெட்பி தனது கைவரிசையை காட்டியுள்ளார். இந்த சம்பவத்தின் போது குழந்தை நல மருத்துவர் டாக்டர் ரவி ஜெயராம் அவரைக் கையும் களவுமாக பிடித்துள்ளார்.
15வது முழு ஆயுள் தண்டனை
உயிருக்கு போராடும் அந்த சிசுவுக்கு உதவி செய்ததாக எந்த ஆதாரமும் இல்லை என்றே டாக்டர் ரவி ஜெயராம் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளார். மட்டுமின்றி, இச்சம்பவத்தின் போது செவிலியர் லூசி உதவிக்கு அழைத்ததாகவும் தாம் கேட்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து சிறப்பு கவனிப்பு பகுதிக்கு அந்த குழந்தை மாற்றப்பட்டதாகவும், மூன்று நாட்களுக்கு பின்னர் மரணமடைந்துள்ளதாகவும் தெரிய வந்தது.
ஆனால் டாக்டர் ரவி ஜெயராம் குறிப்பிடும் எந்த சம்பவமும் தமக்கு நினைவில் இல்லை என்றும், அப்படியான ஒரு சம்பவம் நடந்தது என்று ஏர்றுக்கொள்ளவும் முடியாது என நீதிமன்றத்தில் லூசி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் குறைமாத சிசுவை கொல்ல முயன்ற வழக்கில் அவர் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவருக்கு இன்னொரு முழு ஆயுள் தனடனை விதிக்கப்பட்டது. இது அவருக்கு விதிக்கப்படும் 15வது முழு ஆயுள் தண்டனையாகும்.