பிரதமராக சர் கெய்ர் ஸ்டார்மரின் முதல் நாள்: விவாதத்துக்குரிய திட்டம் ரத்து
பிரித்தானியாவின் பிரதமராக சர் கெய்ர் ஸ்டார்மர் பொறுப்பேற்றதன் முதல் நாள், ரிஷி சுனக் நிறைவேற்றத் துடித்த, செலவு அதிகம் கொண்ட திட்டம் ஒன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
ருவாண்டா திட்டம் ரத்து
மிக மோசமான திட்டத்திற்கு அதிகம் செலவு செய்வதை அப்போதே எதிர்த்து வந்துள்ள கெய்ர் ஸ்டார்மர், அந்த தொகையை ஆட்கடத்தல் குழுக்களை ஒழிக்க பயன்படுத்த இருப்பதாகவும், அதனால் சட்டவிரோத புலம்பெயர் மக்கள் பிரித்தானியாவில் நுழைவதை தடுக்க முடியும் என்றும் தெரிவித்திருந்தார்.
தற்போது ஆட்சியை கைப்பற்றியதும், முதல் நாளில், பலரது எதிர்ப்பையும் சம்பாதித்த ருவாண்டா திட்டமானது ரத்து செய்யப்பட்டுள்ளது. ரிஷி சுனக் அமைச்சரவை நிறைவேற்றத் துடித்த ருவாண்டா திட்டமானது ரத்து செய்யப்பட்டுள்ளது என்றே லேபர் கட்சி தரப்பிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ருவாண்டா திட்டம் வீண் செலவு என குறிப்பிட்டுள்ள ஸ்டார்மர், இதுவரை 500 மில்லியன் பவுண்டுகள் செலவிடப்பட்டும் 1 சதவிகித சிறு படகு பயணிகளும் கூட ருவாண்டாவுக்கு வெளியேற்றப்படவில்லை என விமர்சித்துள்ளார்.
மனிதத்தன்மையுடன் பரிசீலிக்கப்படும்
இதனால் அப்படியான திட்டம் பிரித்தானியாவுக்கு தேவையில்லை என்றும், கண்டிப்பாக அந்த திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் எண்ணமும் தமக்கு இல்லை என ஸ்டார்மர் அப்போதே தெரிவித்திருந்தார்.
மேலும், அடைக்கலம் கோருவோர் தொடர்பிலான விண்ணப்பங்கள் விரைவாகவும் மனிதத்தன்மையுடனும் பரிசீலிக்கப்படும் என்றும் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், நாட்டின் புதிய உள்விவகார செயலரான Yvette Cooper நேற்று தெரிவிக்கையில், நமது எல்லைகளை பாதுகாப்பாக வைத்திருப்பது அரசாங்கத்தின் முதல் கடமைகளில் ஒன்றாகும் என்றார்.