அல்ஹாஜ். எஸ். முத்து மீரானின் ஜனாசா நல்லடக்கம் செய்யப்பட்டது(video)
பலரின் இலக்கிய வாழ்வில் தூண்டுகோலாக அமைந்த ஓர் இலக்கிய மாமேதை நிந்தவூரின் முத்து என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் அல்ஹாஜ். எஸ். முத்து மீரானின் ஜனாசா நல்லடக்கம் வெள்ளிக்கிழமை(5) இரவு ஜனாசா தொழுகையின் பின்னர் நிந்தவூர் பொது மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
பலரின் இலக்கிய வாழ்வில் தூண்டுகோலாக அமைந்த ஓர் இலக்கிய மாமேதை நிந்தவூரின் முத்து என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் அல்ஹாஜ். எஸ். முத்து மீரான் அவர்கள் வெள்ளிக்கிழமை(5) எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அழைப்பை ஏற்றுக் கொண்டார்கள்.இஸ்லாமிய தமிழ் இலக்கியப் பரப்பில் பன்முக ஆளுமையாக விளங்கிய மறைந்த சட்டத்தரணி எஸ். முத்துமீரான், கல்வி, சட்டம் சார்ந்த துறைகளிலும் கூட பாரிய பங்களிப்பை செய்த திருப்தியில் இவ்வுலகையை விட்டுப் பிரிந்திருக்கிறார்.
கிழக்கிலங்கையில், குறிப்பாக நாட்டின் தென்கிழக்கில், அம்பாறை மாவட்டத்தில், நில வளமும் நீர் வளமும் மிக்க நிந்தவூரில் பிறந்து மண்வாசனை கமழும் வண்ணம் தமது ஆக்கங்களைப் படைத்தளித்தவராக முத்துமீரான் வரலாற்றில் இடம் பெறுகிறார்.
எழுத்தாளர், கவிஞர், நாடகாசிரியர், கட்டுரையாளர், உருவகக் கதாசிரியர், நாட்டார் இலக்கிய ஆய்வாளர், நாடறிந்த ஓர் பிரபல்யமான சட்டத்தரணி என பண்முக அடையாளம் கொண்ட ஆளுமை, நிந்தவூர் ஜும்மா பள்ளிவாயலின் தலைவராகவும், பிரதேச சபையின் உறுப்பினராகவுமிருந்து பல ஆலோசனைகளையும் வழிநாடாத்தல்களையும் செய்து ஊரின் வளர்ச்சிக்கு பங்காற்றியவர், எல்லாவற்றிற்கும் மேலாக மிகவும் மனித நேயராக, மற்றவர்களோடு அன்போடும் பண்போடும் பாசத்தோடும் பழகும் ஓர் உறவு இன்று இவ்வுலகைவிட்டு பிரிந்தது எல்லோருக்கும் பேரிழப்பாகும்!
இலங்கையில் மட்டுமல்லாது, கடல் கடந்து, தமிழகத்திலும் கேரளத்திலும் மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் தமிழ், முஸ்லிம் மக்கள் வாழ்கின்ற நாடுகள் பலவற்றிலும் அவர் தமது எழுத்துக்களின் வலிமையினாலும், வீரியத்தினாலும் மக்களின் உள்ளங்களில் நீங்காத இடத்தைப் பிடித்திருக்கின்றார்.
எங்களது இளமைக் காலத்தில், பொலன்னறுவை தம்பாளையில் எங்கள் தந்தையார் கடமையாற்றிய காலத்தில் இருந்தே அங்கு ஆசிரியராக அவர் எங்களுக்கு அறிமுகமாகி யிருந்தார். அன்று தொட்டு இன்று வரை அவரது ஆக்கங்கள் என்றால், அவை சிறுகதையாக, உருவகக் கதையாக, கவிதையாக, கட்டுரையாக, நாடகமாக, நாட்டார் பாடலாக எவையாயினும் அவற்றால்பலரும் ஈர்க்கப்பட்டுள்ளனர்.
இவர் நூற்றுக்கும் மேற்பட்ட உருவகக் கதைகளை எழுதியுள்ளார். இவருடைய முதற் தொகுதியான ‘உருவகக் கதைகள்’ நூல் தென்னிந்தியா கூத்தா நல்லூர் தென்றல் மன்றத்தினால் 25.02.1982ஆம் ஆண்டு கவிஞர் திலகம் சாரணபாஸ்கரனால் வெளியிடப்பட்டது. இவர் இருநூற்றுக்கு மேற்பட்ட வானொலி நாடகங்களையும் நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளையும், பல நூறு கவிதைகளையும் எழுதியுள்ளார்.அத்தோடு இவர் நாட்டார் இலக்கியங்களை ஆய்வு செய்து நூல்களையும் வெளியிட்டுள்ளார். அரசியல் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினராகவும் இருந்துள்ளார். இவர் ஆசிரியர் தொழிலை மேற்கொண்டு வந்த நிலையிலேயே சட்டக் கல்லூரி பரீட்சையில் சித்தியடைந்து சட்டத்துறையில் கற்றலை மேற்கொண்டு சட்டத்தரணியாக தொழில் புரிந்தார்.இவர் நிந்தவூர் பெரிய ஜும்ஆப் பள்ளிவாசல் தலைவராகவும் இருந்து ஊருக்கு சேவையாற்றியுள்ளார்.இவர் நிந்தவூர் மண்ணுக்கு பெரும் புகழை இலக்கியத்துறையில் பெற்றுக் கொடுத்துள்ளார்.
இலங்கையில் மட்டுமன்றி இந்தியா– தமிழ் நாட்டில் உள்ள எழுத்தாளர்கள், அரசியல்வாதிகளுடன், இலக்கியவாதிகளுடன் நெருக்கமான உறவைக் கொண்டவர்.
தமிழ் நாட்டில் நடைபெற்ற தமிழ் இலக்கிய ஆராய்ச்சி மாநாடுகள் பலவற்றில் கலந்து கொண்டு தமிழ் மொழி மற்றும் இலக்கிய ஆய்வுகளை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிழக்கிலங்கைக்கு அதிலும் குறிப்பாக அம்பாறை மாவட்டத்திற்கு உரித்தான நாட்டார் பாடல் இலக்கியத்தை ஆய்வு செய்து, அவை அருகி வரும் காலத்தில் அவற்றை தனித்துவமான ஒரு கலை வடிவமாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பிரபல்யப்படுத்துவதில் முத்துமீரான் போன்ற மிகச் சிலரே முன் நின்றனர்.தன் உயிரோடு ஊறிப் போயிருந்த இஸ்லாமிய தமிழ் இலக்கியத்திற்கு அப்பால் ஆசிரியர் பணியை சிறப்பாக ஆற்றிவிட்டு, சட்டத்துறையிலும் பிரவேசித்து சிரேஷ்ட சட்டத்தரணியாக பிரகாசித்த ஒருவராக முத்துமீரான் இனங்காணப்பட்டார்.