;
Athirady Tamil News

அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு இல்லை! ஜனாதிபதி உறுதி

0

வற் வரியை உயர்த்தி, அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தியிருந்த நிலையில், இந்த ஆண்டு மீண்டும் அவர்களுக்கு சம்பள உயர்வை வழங்க முடியாது. அவ்வாறு சம்பள உயர்வு வழங்கினால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாவார்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

“சட்டத்தை மதிக்கும் நாடு” எனும் தொனிப்பொருளில் வெல்லவாய பொது விளையாட்டரங்கில் நேற்று (6) நடைபெற்ற ஊவா மாகாண சமூக பொலிஸ் குழு உறுப்பினர்களின் வலுவூட்டல் செயலமர்வில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதாரத்தை சீரமைத்து வருகின்றோம்..
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நாட்டின் பொருளாதார நெருக்கடியிலிருந்து இன்று நாம் மீண்டு வருகிறோம். கடந்த இரண்டு மூன்று வருடங்களில் பல பிரச்சினைகளை எதிர்கொண்டோம். சிலர் வாழ்வாதாரத்துக்காக திருடுகிறார்கள். ஆனால் இன்று சிலர் போதைப்பொருள் வாங்கத் திருடுகிறார்கள். இப்போது படிப்படியாக பொருளாதாரத்தை சீரமைத்து வருகிறோம். கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான சலுகைகளையும் பெற்றுள்ளோம்.

நாட்டில் புதிய பொருளாதாரத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அதே வேளையில், அரச நிதி முகாமைத்துவத்துக்கான பணிகளையும் முன்னெடுத்து வருகிறோம். அரச நிதிச் சட்டம், அரச கடன் சட்டம், மத்திய வங்கிச் சட்டம் ஆகியவையும் தயாரிக்கப்பட்டுள்ளன.

நாம் இப்போது வரவு செலவுகளையும் முகாமைத்துவம் செய்ய வேண்டியது அவசியமாகும். கடந்த காலங்களில் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அஸ்வெசும திட்டத்தை நடைமுறைப்படுத்தினோம். மேலும், அரசாங்க ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் சம்பள உயர்வும் வழங்கப்பட்டது.

நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். எனவே, நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தல், மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் பணிகளை ஒரே நேர்கோட்டில் செய்து வருகிறோம்.

அரச ஊழியர்களின் சம்பளம்
இப்போது சிலர் சம்பள உயர்வு வேண்டும் என்கிறார்கள். இது கடினமானதாகும். ஆசிரியர்களுக்கு 2022 இல் சம்பள உயர்வை வழங்கியுள்ளோம். மேலும் 2024 இல் பத்தாயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டது. எனவே அந்தக் கோரிக்கைகள் நியாயமற்றவை. அவர்கள் இரண்டு சலுகைகளைப் பெற்றாலும், மற்றவர்களுக்கு ஒரு சலுகை மட்டுமே கிடைத்தது.

அத்துடன், அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் முகாமைத்து உதவியாளர்களும் சம்பள உயர்வு கோருகின்றனர். இந்த சம்பள உயர்வு செய்தால் கொடுக்க அரசாங்கத்திடம் பணம் இல்லை. அதனால் வரியை அதிகரிக்க வேண்டும். இப்போது 18% VAT வரி வசூலிக்கப்படுகிறது. சம்பள உயர்வு வழங்க, மீண்டும் VAT வரியை அதிகரிக்க வேண்டும். மக்களால் அதை தாங்க முடியாது.

மேலும் 10 இலட்சம் அரச ஊழியர்களே நாட்டில் இருக்க வேண்டும். இப்போது 15 இலட்சம் பேர் உள்ளனர். சிலர் 5 இலட்சம் பேரை சம்பளமில்லாத விடுமுறையில் அனுப்பச் சொன்னார்கள்.

கொடுப்பனவுகளை பின்பு செலுத்தலாம் என்றும் கூறினர். 10 இலட்சம் பேருக்கு சம்பள உயர்வு வழங்க வற் வரி 18 சதவீதமாக உயர்த்த வேண்டியுள்ளது. அப்போது எவரையும் திருப்பி அனுப்ப வேண்டாம் என்று நான் கூறினேன். வற் வரியை உயர்த்தி, அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தியிருந்த நிலையில், இந்த ஆண்டு மீண்டும் அவர்களுக்கு சம்பள உயர்வை வழங்க முடியாது. அவ்வாறு சம்பள உயர்வு வழங்கினால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாவார்கள்.

இம்மாதத்தின் மத்தியிலிருந்து தேர்தலுக்குத் தயாராக வேண்டும். ஆனால் அடுத்த வருடம் முதல் சம்பள திருத்தங்கள் குறித்து ஆராய்வதற்கான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அதற்குத் தேவையான நிதியை ஒதுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.