;
Athirady Tamil News

எகிறும் வெப்பநிலை… வெப்ப அலையில் சிக்கித் தவிக்கும் ஒரு நாட்டின் 130 மில்லியன் மக்கள்

0

வெப்ப அலையின் தீவிரம் நாளுக்கு நாள் சாதனை படைத்துவரும் நிலையில், சுமார் 130 மில்லியன் மக்கள் மொத்தமாக வெப்ப அலையில் சிக்கித் தவிக்கும் கடுமையான சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் 130 மில்லியன் மக்கள்
வெப்பநிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், டசின் கணக்கான காட்டுத்தீ சம்பவங்களும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே அமெரிக்காவின் தேசிய வானிலை சேவை சனிக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் நாடு முழுவதும் 130 மில்லியன் மக்கள் கடுமையான வெப்பம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக மேற்கு மாகாணங்களில் வெப்பநிலை மூன்று இலக்கத்தைத் தொட்டுள்ளது.

சராசரி வெப்பநிலையை விட 15F முதல் 30F வரை அதிக வெப்பநிலை காணப்படும் என்றும், அடுத்த வாரமும் இதே நிலை நீடுக்கும் என்றும் எச்சரித்துள்ளனர்.

மேலும், அழுத்தப்பட்ட வெப்பம் மற்றும் ஈரப்பதம் பசிபிக் வடமேற்கின் சில பகுதிகளில், மத்திய அட்லாண்டிக் மற்றும் வடகிழக்கில் 100F க்கு மேல் வெப்பநிலையை அதிகரிக்கும் என்றும் தேசிய வானிலை சேவை குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, வெள்ளிக்கிழமை மட்டும் குறைந்தது நான்கு ஓரிகான் நகரங்களில் வெப்பநிலை சாதனைகள் முறியடிக்கப்பட்டன. Medford பகுதியில் 1926ல் மிக உயர்ந்த வெப்பநிலையாக 102F பதிவாகியிருந்தது. ஆனால் வெள்ளிக்கிழமை அந்த சாதனை முறியடிக்கப்பட்டு 109F பதிவாகியுள்ளது.

இதேப்போன்று North Bend பகுதியில் 1913ல் சாதனை வெப்பநிலையாக 74F பதிவாகியிருந்தது. ஆனால் தற்போது வெள்ளிக்கிழமை 85F பதிவாகியுள்ளது. Las Vegas நகரில் வெள்ளிக்கிழமை பகல் 10.30 மணிக்கு 100F பதிவாகியுள்ளது.

சிவப்புக் கொடி எச்சரிக்கை
ஆனால் சனிக்கிழமை மதியம் Las Vegas நகரில் பதிவான வெப்பநிலை 115F என தேசிய வானிலை சேவை தெரிவித்துள்ளது. இந்த நிலையில், சனிக்கிழமை மாலை வரை கலிபோர்னியாவின் பெரும்பகுதி முழுவதும் சிவப்புக் கொடி எச்சரிக்கைகள் அமுலில் இருக்கும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டுமின்றி, மக்கள் விழிப்புடன் இருக்குமாறும், தீயை உண்டாக்கும் செயல்களைத் தவிர்ப்பது மற்றும் வெளியேற்ற உத்தரவுகளைப் பின்பற்றுவது போன்ற கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகள் மக்களை வலியுறுத்தினர்.

கலிபோர்னியா மாகாணத்தில் இருபதுக்கும் மேற்பட்ட காட்டுத் தீ சம்பவங்கள் ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 24,000 ஏக்கர் நிலப்பரப்பு பற்றியெரிகிறது.

இதனிடையே, கிழக்கு அமெரிக்காவும் மிக மோசமான வெப்பநிலையை எதிர்கொண்டுள்ளது. பால்டிமோர் மற்றும் மேரிலாந்தின் பிற பகுதிகள் அதிக வெப்ப அலை எச்சரிக்கையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.