யாழ்.தென்மராட்சியில் கதவடைப்பு – வைத்தியசாலை முன்பாக போராட்டம் தொடர்கிறது
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் அத்தியட்சகர் பதவியில் இருந்து வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை இடமாற்றும் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வைத்தியசாலை முன்பாக நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆரம்பித்த கண்டன ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகளவிலான மக்களின் பங்கேற்புடன் தற்போது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக சாவகச்சேரி நகர்ப்பகுதிகளில் கடைகள், பொதுச்சந்தை மூடப்பட்டுள்ளது.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை பதில் வைத்திய அத்தியட்சகரை மாற்றக்கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தொடர்ச்சியாக நான்கு தினங்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று திங்கட்கிழமை வைத்தியர்கள் வைத்தியசாலைக்கு வருகை தந்து தமது கடமைகளை ஆரம்பித்துள்ளதுடன், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் சமன் பத்திரணவின் கட்டுப்பாட்டில் வைத்தியசாலை இயங்க ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை வைத்தியசாலை பதில் அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா ,பொதுமக்கள் வெளியே போக சொல்லாமல் நான் வெளியேற மாட்டேன் என தெரிவித்து வைத்தியசாலையில் தொடர்ந்து இருந்து வருகிறார்.
புதிய பதில் அத்தியட்சகருக்கான கடிதம் கிடைத்தவுடன் விரைவில் நியமனம் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
அப்பகுதியில் பெருமளவு பொலிஸாரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னேற்றத்திற்காக செயற்பட முனையும் புதிய வைத்திய அத்தியட்சகருக்கு ஏதிராக முன்னெடுக்கப்படும் சதிகளை உடைத்தெறியவும் வைத்தியசாலையின் பணிகளை உடன் வழமைக்கு திரும்ப வலியுறுத்தியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கும் கடையடைப்புக்கும் சாவகச்சேரி பொது அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களால் அழைப்பு விடுக்கப்பட்டு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.