நெதன்யாகுவுக்கு எதிரான கைதாணை: கெய்ர் ஸ்டார்மர் அரசாங்கம் எடுக்கவிருக்கும் முடிவு
பிரித்தானியாவில் அமைந்துள்ள புதிய லேபர் அரசாங்கம், இஸ்ரேல் பிரதமருக்கு எதிரான சர்வதேச கைதாணை தொடர்பில் முக்கிய முடிவெடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
போர் குற்றங்களுக்காக
காஸா பகுதியில் இஸ்ரேல் முன்னெடுத்த போர் குற்றங்களுக்காக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைதாணை பிறப்பிக்க முடிவு செய்துள்ளது.
ஆனால் தற்போது பிரித்தானியாவில் அமைந்துள்ள லேபர் அரசாங்கம் அந்த நடவடிக்கையை தாமதப்படுத்தும் முயற்சியில் களமிறங்கும் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
சர் கெய்ர் ஸ்டார்மர் பிரித்தானியாவின் புதிய பிரதமராக பொறுப்பேற்றதன் பின்னர் பாலஸ்தீன அதிகார சபையின் தலைவர் மஹ்மூத் அப்பாஸ் உடனான தொலைபேசி அழைப்பில்,
ஒரு பாலஸ்தீனிய அரசு அமைப்பதில் அங்குள்ள மக்களுக்கு மறுக்க முடியாத உரிமை இருப்பதை தாம் நம்புவதாக தெரிவித்துள்ளார். அத்துடன் இழப்புகளும் துயரங்களும் தொடர்கதையானதையும் தலைவர்கள் இருவரும் விவாதித்துள்ளனர்.
இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை தொடர்புகொண்ட ஸ்டார்மர், விரைவான உறுதியான போர் நிறுத்தம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
கைதாணை தாமதமாகலாம்
மேலும் இரு நாடுக் கொள்கையில் தாங்கள் உறுதியாக இருப்பதையும் ஸ்டார்மர் நினைவுப்படுத்தியுள்ளார். இதனிடையே, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு காஸா மீது அதிகார வரம்பு இருப்பதாகவே லேபர் கட்சி தொடர்ந்து நம்புகிறது.
ஆனால் ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் அரசாங்கம் முன்வைத்த கோரிக்கையில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இஸ்ரேலிய குடிமக்கள் மீது அதிகார வரம்பு இல்லை என்றே குறிப்பிட்டுள்ளது.
மட்டுமின்றி, இந்த விவகாரத்தில் ஜூன் 10ம் திகதி ரகசியமாக உரிய பதிலை தாக்கல் செய்ய பிரித்தானியாவை கோரியிருந்த நிலையில், தற்போது அது வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், பிரித்தானியா அரசாங்கம் முன்வைத்துள்ள சவாலில், இஸ்ரேல் குடிமக்களை கைது செய்யும் அதிகாரம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இல்லை என்பதை ஒஸ்லோ உடன்படிக்கையின் கீழ் சுட்டிக்காட்டியுள்ளது. இதனால் நெதன்யாகு மீதான கைதாணை வெளியாவதில் தாமதமாகலாம் என்றே தகவல் வெளியாகியுள்ளது.