;
Athirady Tamil News

சுகயீன விடுமுறைப் போராட்டத்திற்கு அழைப்பு – அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பு

0

இலங்கையின் ஆசிரியர் அதிபர்களுக்கு எழுத்து மூலம் வாக்குறுதியளிக்கப்பட்டிருந்த சம்பள முரண்பாட்டுத் தீர்வின்படி வழங்கப்படாது இழுத்தடிப்பு செய்யப்பட்டு வரும் நிலையில் பல்வேறு போராட்டங்கள் செய்தும் பலனில்லாத நிலையில் எமது ஆசிரியர்இ அதிபர் தொழிற்சங்கக்கூட்டணி செவ்வாய்கிழமை (09) சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் ஏ.ஆதம்பாவா தெரிவித்தார்.

இது தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் மாநாடு அம்பாறை மாவட்டம்இ சாய்ந்தமருது அல்-கமரூன் வித்தியாலயத்தில் திங்கட்கிழமை (08) மாலை 5 மணிக்கு இடம்பெற்றது.

இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ஏ.ஆதம்பாவா,

செவ்வாய்க்கிழமை (9) நாடு முழுவதும் சுகயீன லீவுப்போராட்டங்களை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம். இப்போராட்டத்தின் நோக்கத்தை தெளிவாக ஆட்சியாளர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். நாங்கள் கேட்பது சம்பள அதிகரிப்பல்ல. சம்பள முரண்பாட்டுக்கான தீர்வு.
இதற்காக முழு நாட்டிலுமுள்ள அனைத்து கல்வி வலயங்களிலுமுள்ள அதிபர், ஆசிரியர்கள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றோம்.

இதேவேளை, கடந்த காலங்களில் எமது போராட்டங்களில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பூரண ஒத்துழைப்பு கிடைத்தது. கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ்ப்பேசும் அதிபர், ஆசிரியர்களும் நாளை பூரண ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எமக்குண்டு.
ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கக்கூட்டணியின் தலைமையில் நடத்திய போராட்டங்களின் விளைவாக 1997ம் ஆண்டு முதல் நிலவி வந்த ஆசிரியர், அதிபர் சம்பள வேறுபாட்டில் 1/3 பங்கை வென்றெடுக்க முடிந்தது.

என்றாலும் சுபோதானி சம்பளக்குழுவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையில் உள்ளடங்கிய சம்பளத்தில் மேலும் 2/3 பங்கு எமக்கு எஞ்சியுள்ளது.
எஞ்சிய 2/3 சம்பள ஏற்றத்தாழ்வை வென்றெடுக்கும் போராட்டத்தை முன்னெடுத்துச்செல்கின்ற நாம், தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட ஆட்சியாளர்கள் வழியமைக்காமல் எமது நியாயமான கோரிக்கைக்கு செவி சாய்த்து எங்களது கோரிக்கையை நிறைவேற்ற முன்வர வேண்டும்.
தவறும் போது, தொடர் போராட்டங்களை நடத்துவதற்கும் நாங்கள் தயங்கமாட்டோம். இதனால் நாட்டில் ஏற்படுகின்ற அசௌகரியங்களுக்கு ஆட்சியாளர்கள் முகங்கொடுக்க வேண்டி வரலாம் என்றும் குறிப்பிட்டார்.

இச்செய்தியாளர் சந்திப்பில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் அம்பாறை மாவட்டச்செயலாளர் எம்.எஸ்.சத்தார், ஆசிரியர் சேவை சங்கத்தின் உறுப்பினர் ஏ.சியாம், இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் கல்முனை கல்வி வலயச்செயலாளர் எம்.எஸ்.எம்.சியாத், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கல்முனை கல்வி வலய இணைப்பாளர் ஏ.எம்.எம்.ஸாகிர் ஆகியோரும் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.