அகதிகளும் நம்மில் ஒரு பாகம்தான்… மாற்றத்தை ஏற்படுத்துங்கள்: பிரித்தானிய பிரதமருக்கு கோரிக்கை
புலம்பெயர்தல் கொள்கைகளில் மாற்றங்கள் செய்யுமாறு கோரி, பல்வேறு புலம்பெயர்தல் ஆதரவு அமைப்புகளும், தனி நபர்களும், பிரித்தானியாவின் புதிய பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்கள்.
மாற்றத்தை ஏற்படுத்துங்கள்
நூற்றுக்கணக்கான அகதிகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள், முந்தைய அரசின் புலம்பெயர்தல் கொள்கைகளில் மாற்றம் செய்யக்கோரி, பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளன.
அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விடயங்களாவன:’
சர்வதேச சட்டத்துக்கிணங்க பிரித்தானியாவில் புகலிடம் கோரும் உரிமையை மீண்டும் கொண்டுவரவேண்டும். சட்டவிரோத புலம்பெயர்தல் சட்டம் மற்றும் தேசியம் மற்றும் எல்லைகள் சட்டத்தை நீக்கவேண்டும்.
ஆங்கிலக்கால்வாயில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் புகலிடக்கோரிக்கையாளர்கள் பயணம் செய்வதைத் தவிர்க்க அவர்களுக்கு விசா வழங்கல், குடும்பங்களை இணைத்தல் மற்றும் அகதிகள் மறுகுடியமர்தலை மீண்டும் கட்டியமைத்தல் போன்ற பாதுகாப்பான புலம்பெயரும் வழிகளை உருவாக்கிக்கொடுக்கவேண்டும்.
புகலிடக்கோரிக்கையாளர்களை முகாம்கள், படகுகள், ஹொட்டல்கள் போன்ற இடங்களில் அடைக்காமல் சமுதாயத்தில் அவர்களுக்கு வீடுகளை அமைத்துக்கொடுக்கவேண்டும்.
புகலிடக்கோரிக்கையாளர்கள் பிரித்தானியாவுக்கு வந்து ஆறு மாதங்களுக்குள் அவர்களுக்கு வேலை செய்யும் உரிமையை மீண்டும் வழங்கவேண்டும். இதனால் அவர்கள் கௌரவத்துடன் வாழ்வதுடன், பிரித்தானியாவின் பொருளாதாரத்துக்கும் தங்கள் பங்களிப்பைச் செய்வார்கள் என்கிறது அந்தக் கடிதம்.
Penrith and Eden Refugee Network என்னும் அமைப்பின் இயக்குநரான சாரா வில்சன் என்பவர், அகதிகள் எப்போதுமே பிரித்தானியாவின் ஒரு பாகமாகவே விளங்கிவந்துள்ளார்கள், ஆகவே, அந்த பாரம்பரியத்தை மீண்டும் கட்டியெழுப்பவேண்டும் என நாங்கள் அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.
பிரித்தானியாவில் நிலவும் வெறுப்புச் சூழல் காரணமாக பல உயிர்கள் போனதைக் கண்டிருக்கிறோம். பிரித்தானியாவில் அடைக்கலம் கோருபவர்களை நாம் நடத்தும் விதத்தை மாற்றுவதற்கான நேரம் இது என்று கூறியுள்ளார்.