பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள தோட்டப் பகுதிகளைக் கிராமங்களாக்குவதற்கு அமைச்சரவை தீர்மானம்
பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள தோட்டப் பகுதிகளைக் கிராமங்களாகப் பெயரிடுவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
இதற்கான வர்த்தமானி அறிவிப்பினை வெளியிடுவதற்கு நேற்று(9) கூடிய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதனை,இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான்(Jeevan Thondaman) நாடாளுமன்றில் வைத்து தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானம்
மேலும், தங்களின் ஆலோசனையுடன் அதிபர் இதற்கான யோசனையை முன்வைத்தற்கமைய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதே வேளை மலையகப் பெருந்தோட்ட பகுதிகளிலுள்ள பாடசாலைகளுக்கு இம்முறை அதிகளவு நிதியை ஒதுக்கியுள்ளோம்.
குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக நாம் இரண்டு வருட திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளோம். மலையகப் பெருந்தோட்ட பகுதியிலுள்ள 1197 சிறுவர் பராமரிப்பு நிலையங்களையும் உள்ளடக்கிய வகையில் காலை உணவு வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளோம்.
சலுகை அரசியலில் ஈடுபடுவதைப் பார்க்கிலும் எமது சிறுவர்களின் பாதுகாப்பு,முன்னேற்றம் தொடர்பில் கவனம் செலுத்துவது அவசியமாகிறது.அந்த வகையில் ஒரு பின் தங்கிய சமூகத்துக்கு மத்தியில் அரசியல் செய்வது தவறு.
அந்த வகையில் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்துவதை விடுத்து ஒன்றிணைந்து எம் மக்களுக்கு தீர்வொன்றைப் பெற்றுக் கொடுப்போம் என்றார்.