நாணய தாள்களை காலால் மிதித்த குற்றம் – தியாகி பிணையில் விடுவிப்பு
இலங்கையில் புழக்கத்தில் உள்ள ஐந்தாயிரம் ரூபாய் தாள்களை காலில் போட்டு மிதித்த சம்பவம் தொடர்பில் தியாகி அறக்கொடை நிறுவனத்தின் தலைவர் வாமதேவா தியாகேந்திரனுக்கு எதிராக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு விசாரணைக்காக நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை தியாகேந்திரன் நீதிமன்றில் முன்னிலையான போது, இரண்டு ஆள் பிணையில் செல்ல மன்று அனுமதித்தது.
தியாகி அறக்கொடை நிறுவன தலைவரின் மகளின் 40ஆவது பிறந்த தினத்தினை முன்னிட்டு, கடந்த ஜூன் மாதம் 7ஆம் திகதி யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள தனது அறக்கட்டளை அலுவலகத்தின் முன்பாக வைத்து வறிய மக்களுக்கு நிவாரணம் வழங்கினார்.
அதன் போது, ஊடகம் ஒன்றிற்கு தியாகேந்திரன் கருத்து தெரிவிக்கும் போது ,
இன்றைக்கு நிவாரணம் பெறுவதற்கு தான் எதிர்பார்த்த மக்கள் வரவில்லை என கூறி , தனது சட்டை பையில் இருந்த பெருமளவான ஐந்து ஆயிரம் ரூபாய் தாள்களை எடுத்து நிலத்தில் போட்டு சப்பாத்து காலால் மிதித்த படி நின்று கருத்து தெரிவித்தார்.
குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியதை அடுத்து பெருமளவானோர் கடும் எதிர்ப்புக்களை தெரிவிப்பதுடன் கண்டனங்களையும் பதிவு செய்தனர்.
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாண பொலிஸார் தியாகேந்திரனிடம் வாக்குமூலத்தினை வாக்கு மூலத்தினை பெற்று , யாழ்.நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.