உ.பி.யில் டபுள் டக்கர் பேருந்து விபத்து: 18 பேர் பலி
உத்தர பிரதேசத்தில் பால் லாரி மீது டபுள் டக்கர் பேருந்து மோதியதில் 18 பேர் புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தனர்.
ஆக்ரா – லக்னெள அதிவிரைவுச் சாலையில் உன்னாவ் மாவட்டம் பெஹ்தா முஜாவர் காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் இன்று அதிகாலை 5 மணியளவில் விபத்து நடந்துள்ளது.
இந்த விபத்தில், பிகார் மாநிலம் மோதிஹாரி மாவட்டத்தில் இருந்து தில்லி நோக்கி சென்று கொண்டிருந்த டபுள் டக்கர் சொகுசுப் பேருந்து, பால் லாரி மீது அதிவேகமாக மோதியதில் சாலையில் கவிழ்ந்தது.
பேருந்து ஓட்டுநர், லாரி ஓட்டுநர் உள்பட 18 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மேலும், 19 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து மாவட்ட ஆட்சியர் கெளரங் ரதி கூறுகையில், பேருந்து அதிவேகமாக லாரி மீது மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது, விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள உபி முதல்வர் யோகி ஆதித்யநாத், மீட்புப் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்கள் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.