;
Athirady Tamil News

ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகுமாறு ஜோ பைடன் மீது அதிகரிக்கும் அழுத்தம் – ஜனநாயக கட்சிக்குள் விவாதம்!

0

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப்பை எதிர்கொள்வதற்கான தகுதியுடன் ஜோ பைடன் உள்ளாரா என்பது குறித்து மூடிய சந்திப்பொன்றில் ஜனநாயக கட்சியினர் கலந்துரையாடியுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலில் இருந்து ஜோ பைடன் விலக வேண்டும் என 07 ஆவது காங்கிரஸ் உறுப்பினரும் கோரியுள்ள நிலையில், ஜோ பைடன் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன.

ஜோ பைடன் மீது அதிகரிக்கும் அழுத்தம்
டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக இறுதியாக நடத்தப்பட்ட விவாதத்தின் போது வார்த்தைகளில் தடுமாற்றத்தை வெளிப்படுத்தியமை ஜோ பைடனின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதத்தன்மையை கேள்விக்குட்படுத்தியுள்ளது.

இதன்காரணமாக ஜோ பைடன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலக வேண்டும் என ஜனநாயக கட்சியினர் மாத்திரமன்றில், அவர்களுக்கு நிதி வழங்கும் முக்கிய நபர்களும் அழுத்தங்களை பிரயோகித்துவருகின்றனர்.

ஜோ பைடனின் தகுதித்தன்மை தொடர்பான கேள்விகள் எழுந்துள்ள நிலையில், ஜனநாயக கட்சியின் மூடிய சந்திப்பொன்றில் கலந்துரையாடியுள்ளனர்.

இந்த சந்திப்புக்கு முன்னரும் சந்திப்பிற்கு பின்னரும் ஜனநாயக கட்சியின் மூத்த செனட் உறுப்பினான சக் ஷுமர், ஜோ பைடனுக்கு தனது ஆதரவை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதியாக பதவி வகிப்பதற்கு ஜோ பைடன் உடற்தகுதியுடன் உள்ளதாக அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

தென் கரோலினா உறுப்பினரான ஜிம் கிளைபேர்னும் ஜோ பைடனுக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான போட்டியில் ஜோ பைடன் தொடர்ந்தும் இருப்பது குறித்து ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒரே நிலைப்பாட்டை கொண்டிருக்கவில்லை என இல்லினோய்ஸ் மாநில உறுப்பினர் டிக் டர்பின் கூறியுள்ளார்.

இந்த சந்திப்பு இடம்பெற்று சில மணி நேரத்தின் பின்னர் கருத்து வெளியிட்ட நியூ ஜேர்சி மாநில உறுப்பினர் மிக்கி ஷெரில், ஜோ பைடன் போட்டியில் இருந்து விலக வேண்டும் என வெளிப்படையாக கூறியுள்ளார்.

மிக்கி ஷெரிலுடன் சேர்த்து இதுவரை ஏழு ஜனநாயக கட்சியின் ஏழு உறுப்பினர்கள் ஜோ பைடன், ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலக வேண்டும் என வெளிப்படையாக வலியுறுத்தியுள்ளனர்.

ஜோ பைடனும் அவரது அணியினரும் உண்மையான பொதுமக்களுக்கான பணியாளர்கள் என்ற போதிலும் நாட்டின் சிறந்த ஜனநாயக நலன்களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

நாட்டின் எதிர்காலம் குறித்து ஜோ பைடன் மிகுந்த அக்கறையுடன் உள்ளதாக கூறியுள்ள மிக்கி ஷெரில், போட்டியில் இருந்து விலகுவதாக அவர் அறிவிப்பதன் மூலம் புதிய ஒருவரை முன்மொழிய வாய்ப்பு கிடைக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.