மற்றுமொரு விவாதம்: பைடனுக்கு மீண்டும் சவால் விடும் டிரம்ப்
அமெரிக்க (USA) அதிபர் தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில், சக போட்டியாளரான அதிபர் ஜோ பைடனுக்கு (Joe Biden), முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) மீண்டும் சவால் விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ம் திகதி நடக்கவுள்ளது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் போட்டியிட இவரை எதிர்த்து, குடியரசு கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் களம் காண்கிறார்.
இந்தநிலையில், பைடன் மற்றும் டிரம்ப் பங்கேற்ற பொது விவாத நிகழ்ச்சி கடந்த 27ல் நடந்தது. இதில் டிரம்ப் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் பைடன் திணறினார்.
நேருக்கு நேர்
இதையடுத்து, அதிபர் வேட்பாளரில் இருந்து ஜோ பைடனை மாற்ற வேண்டும் என, அவரது கட்சியினரே குரல் கொடுத்தப்போதும் அவர் தேர்தலில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், புளோரிடாவில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய டிரம்ப், பைடனை மீண்டும் நேருக்கு நேர் சந்திக்க தயாராக இருப்பதாக மீண்டும் சவால் விடுத்துள்ளார்.
அப்போது அவர் “ உலகத்தின் முன் தன்னை மீட்டுக் கொள்ள ஜோ பைடனுக்கு நான் மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்க தயாராக உள்ளேன்.
இருவருக்குமான விவாதம்
இந்த வாரம் மற்றொரு விவாதத்தை நடத்துவோம். ஆனால், இந்த முறை எங்கள் இருவருக்குமான விவாதம், பார்வையாளர்கள், நடுவர்கள் யாரும் இன்றி நடக்க வேண்டும்.
எந்தநேரத்தில், எங்கு நடக்க வேண்டும் என்பதை பைடன் தரப்பினரே முடிவு செய்யட்டும். அதேபோல், அவருடன் ‘கோல்ப்’ விளையாடவும் நான் தயாராக உள்ளேன்.
இதில், பைடன் வெற்றிபெற்றால், அவர் விரும்பும் தொண்டு நிறுவனத்துக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்குவேன் என கூறியுள்ளார்.