;
Athirady Tamil News

பயணிகளுடன் மாயமான இரண்டு பேருந்துகள்: வெளிநாடொன்றில் சம்பவம்

0

மத்திய நேபாளத்தில் (Central Nepal) அமைந்துள்ள மதன் – ஆஷ்ரித் (Madan-Ashrit) பிரதான சாலை அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இரண்டு பயணிகள் பேருந்து அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த சம்பவமானது, நேற்று  (12) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், திரிசூலி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றதால், மதன் – ஆஷ்ரித் நெடுஞ்சாலையில் நேற்று  அதிகாலை 3.30 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

தேடும் பணி
இதன்போது சாலையில் சென்றுகொண்டிருந்த இரண்டு பேருந்துகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இரண்டு பேருந்துகளிலும் 63 பயணிகள் இருந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும் திரிசூலி ஆற்றில் பேருந்து அடித்துச் செல்லப்பட்டதால், தேடுதல் மற்றும் மீட்புப் பணிக்கு இடையூறாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

நேபாள காவல்துறை மற்றும் ஆயுதப்படை காவலர்கள் மீட்பு பணிகளுக்காக சம்பவ இடங்களை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக காவல்துறை கண்காணிப்பாளர் பவேஷ் ரிமல் (Pawesh Rimal) தெரிவித்துள்ளார்.

மோசமான வானிலை
இது குறித்து நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல் (Pushpa Kamal Dahal) தெரிவிக்கையில், “நடந்த சம்பவம் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளதுடன் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் நாட்டின் பல பகுதிகளில் பலர் வீடு மற்றும் சொத்துக்களை இழந்துள்ளனர்.

மேலும், உள்விவகார நிர்வாகம் உட்பட அரசாங்கத்தின் அனைத்து அமைப்புகளும் மீட்பு நடவடிக்கையில் களமிறக்கப்பட்டுள்ளது.“ என தெரிவித்தார்.

இதேவேளை வானிலை மோசமாக இருப்பதால் காத்மண்டுவில் இருந்து சித்வானின் பரத்பூருக்குச் செல்லும் அனைத்து விமானங்களும் இன்றைய தினம் ரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.