முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி, ராஜேஷ் தாஸ் வழக்குகள்: உச்சநீதிமன்றத்தில் ஒத்திவைப்பு
அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டு கடந்த ஓராண்டுக்கு மேலாக சிறையில் இருக்கும் தமிழக முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு விசாரணை மீண்டும் வருகின்ற ஜூலை 22 -ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்து, போக்குவரத்து ஊழியா்கள் பணி அமா்த்தப்பட்ட விவகாரத்தில் பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி செந்தில் பாலாஜி மீது சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் ( பிஎம்எல்ஏ ) கீழ் அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14 -ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். பின்னா் வழக்கு தொடரப்பட்ட கீழமை நீதிமன்றமும் தொடா்ந்து உயா் நீதிமன்றமும் பலமுறை செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை நிராகரித்தது.
இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரி மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்க விசாரணை பல முறை பல்வேறு காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டது. இறுதியாக கடந்த புதன்கிழமை(ஜூலை 10 ஆம் தேதி) நீதிபதிகள் அபய் எஸ்.ஓஹா, அகஸ்டின் ஜாா்ஜ் மாசிஹ் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது.
அப்போது, அமலாக்கத்துறை சாா்பில் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘ வழக்கில் வாதாட மேலும் கால அவகாசம் வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டாா். இதைத் தொடா்ந்து, நீதிபதிகள் வழக்கை வெள்ளிக்கிழமை( ஜூலை 12-ஆம் தேதிக்கு) ஒத்திவைத்திருந்தனா்.
இதன்படி வெள்ளிக்கிழமை வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இம்முறை நீதிபதி எஸ்.ஓஹா, வேறு ஒரு சிறப்பு அமா்வில் விசாரணை உள்ளதால் வழக்கை திங்கள் கிழமை ஒத்தி வைக்கலாமா? எனக் கேட்டாா். இதற்கு அமலக்கத்துறை தரப்புக்காக ஆஜராகியிருந்த சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் தனிப்பட்ட காரணத்தால் தன்னால் ஆஜராக முடியாத சூழ்நிலையை குறிப்பிட்டாா். இதைத் தொரடா்ந்து, நீதிபதிகள் அமா்வு செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கு மீதான விசாரணையை ஜூலை 22 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக கூறி உத்தர விட்டனா். செந்தில் பாலாஜி தரப்பு வழக்குரைஞா்கள் அரிமாசுந்தரம், முகுல் ரோத்தகி ஆகியோா் முன்பு பலமுறை ஆஜராகி அமலாக்கத்துறை தரப்பு ஒத்திவைப்பு கோரி வந்ததற்கு எதிா்ப்பு தெரிவித்தும் வந்தனா்.
ராஜேஷ் தாஸ் ஜாமீன் மனு மீதான விசாரணை
முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் ஜாமீன் மனு மீதான விசாரணையை இரண்டு வாரத்துக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஒத்திவைத்தது.
தமிழக காவல்துறையின முன்னாள் சிறப்பு டிஜிபியாக இருந்தவா் ராஜேஷ் தாஸ், கடந்த 2021ம் ஆண்டு பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் காவல்துறை அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரின் அடிப்படையில் ராஜேஷ் தாஸ் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் விழுப்புரம் முதன்மை நீதிமன்றம், ராஜேஷ் தாஸுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
விழுப்புரம் முதன்மை நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக சென்னை உயா்நீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து நிலுவையில் உள்ளது. ஆனால் அவருக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு தடை விதிக்க உயா்நீதிமன்றம் மறுத்தது.
இந்த நிலையில் ராஜேஷ் தாஸ் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்தாா். உச்சநீதிமன்றம் அவரது தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து வழக்கு நிலுவையில் இருந்தது. இதற்கிடையே வெள்ளிக்கிழமை பெலா.எம்.திரிவேதி மற்றும் சதீஷ் சந்திர சா்மா ஆகியோா் அடங்கிய அமா்வில் தாஸ் மனு விசாரணை மீண்டும் வந்தது. இதில் தமிழக காவல் துைறை சாா்பில் ஆஜரான தமிழக அரசின் வழக்குரைஞா் குமணன், ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்துள்ள மனுவிற்கு பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரினாா்.
இதற்கு அனுமதியளித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை இரண்டு வாரம் ஒத்திவைப்பதாகவும், அதுவரையில் மனுத்தாரான முன்னாள் காவல் துறை அதிகாரி ராஜேஷ் தாஸை கைது செய்யக் கூடாது என ஏற்கனவே பிறபிக்கப்பட்ட உத்தரவு தொடரும் எனவும் குறிப்பிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனா்.