67 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி
விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத் தேர்தலின் இறுதிச்சுற்று வாக்குகள் எண்ணிக்கை முடிவடைந்த நிலையில், 67,169 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி பெற்றுள்ளார்.
விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக இருந்த திமுகவைச் சேர்ந்த நா.புகழேந்தி உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் ஜூலை10-ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் ஜூன் 10-ஆம் தேதி அறிவிப்பை வெளியிட்டது.
ஜூன் 14-ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டு, ஜூலை 26-ஆம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. திமுகவின் அன்னியூர் அ.சிவா, பாமகவின் சி.அன்புமணி, நாதகவின் பொ.அபிநயா உள்ளிட்ட 29 பேர் தேர்தலில் போட்டியிட்டனர். இவர்களில் 3 பேர் இடையே கடும் போட்டி நிலவியது. இந்த இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்தது.
தொடர்ந்து 15 நாள்களுக்கு மேலாக தீவிரமாக நடைபெற்றதேர்தல் பிரசாரம் ஜூலை 8-ஆம் தேதி நிறைவு பெற்ற நிலையில், ஜூலை 10-ஆம்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
1,16,962 ஆண் வாக்காளர்கள், 1,20,040 பெண் வாக்காளர்கள், 29 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தமாக 2,37,031 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில், 95,536 ஆண் வாக்காளர்கள், 99,444 பெண் வாக்காளர்கள், 15 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தமாக 1,95,495 வாக்காளர்கள் வாக்களித்தனர். இது 82.48 சதவீத வாக்குப்பதிவானது.
இந்த நிலையில், பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கியது. முன்னதாக மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான சி.பழனி, தேர்தல் நடத்தும் அலுவலர் மு.சந்திரசேகர் தலைமையில், அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், அவர்களின் முகவர்கள் முன்னிலையில் பாதுகாப்பு அறைக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டு, அறை திறக்கப்பட்டது. தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை பகுதிக்கு கொண்டு வரப்பட்டன. முன்னதாக விக்கிரவாண்டி வட்டாட்சியரகத்தில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த அஞ்சல் வாக்குகள் கொண்ட பெட்டி எடுக்கப்பட்டு, வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டு வரப்பட்டன.
சனிக்கிழமை காலை 8 மணிக்கு முதலில் அஞ்சல் வாக்குகளைக் கொண்ட பெட்டியின் சீல் உடைக்கப்பட்டு, வாக்குகள் பிரிக்கப்பட்டு, 50 எண்ணிக்கை கொண்டு கட்டுகளாக கட்டப்பட்டு பின்னர் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று முன்னிலை நிலவரம் அறிவிக்கப்பட்டு வந்ததது.
20 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், இறுதிச் சுற்றுகள் முடிவில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1,23,195 வாக்குகள் பெற்று 67,169 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்தனர்.
இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டி வருகின்றனர்.
பாமக வேட்பாளர் சி.அன்புமணி 56,026 வாக்குகளும், நாதக வேட்பாளர் பொ. அபிநயா 10.479 வாக்குகளும் பெற்றுள்ளனர். நோட்டாவுக்கு 852 வாக்குகள் கிடைத்துள்ளன.
இந்த இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்பட 27 பேர் டெபாசிட் இழந்துள்ளனர்.