;
Athirady Tamil News

வெளிநாட்டவர்களுக்கான விசா வழங்கும் பணியில் சிக்கல்! கட்டணங்களில் வேறுபாடு

0

வெளிநாட்டவர்களுக்கு விசா விநியோகிக்கும் பணியை வெளிநாட்டு நிறுவனத்துக்கு வழங்கியுள்ள விவகாரத்தில் பல சிக்கல்கள் காணப்படுகின்றன என்று அரச நிதி தொடர்பான குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா(Harsha de Silva) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அதிருப்திக்குரியது..

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் வெளிநாட்டவர்களுக்கு விசா விநியோகிக்கும் பணியை வெளிநாட்டு கூட்டு நிறுவனத்துக்கு பொறுப்பாக்கியமை தொடர்பில் சமூக கட்டமைப்பில் பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தின.

இவ்விடயம் குறித்து அரச நிதி தொடர்பான குழுவில் விசாரணைகளை மேற்கொண்ட போது பல சிக்கல்களை எதிர்கொண்டோம். குழுவுக்கு முன்னிலையான அதிகாரிகள் எம்மை அலட்சியப்படுத்தும் வகையில் செயற்பட்டமை அதிருப்திக்குரியது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகள் முன்வைத்த விடயங்களை முழுமையாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பித்துள்ளோம். இந்த அறிக்கையை சபைக்கு சமர்ப்பிக்கிறேன்.

வெளிநாட்டவர்களுக்கு விசா விநியோகிக்கும் சேவையை வி.எப்.எஸ் நிறுவனத்துக்கு வழங்கியுள்ளதாகவும், இந்த நிறுவனம் 145 நாடுகளில் சேவை வழங்குவதாக குறிப்பிடப்பட்டது. ஆனால் இந்த சேவை வி.எப்.எஸ். நிறுவனத்துக்கு வழங்கப்படவில்லை மாறாக ஜி.பி.எஸ் என்று கூட்டு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்களை முழுமையாக ஆராய்ந்து எமது அவதானிப்புக்களை முன்வைத்துள்ளோம்.போட்டித்தன்மையான விலைமனுக்கோரல் ஏதும் இல்லாத வகையில் தான் இந்த நிறுவனத்திடம் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.போட்டித்தன்மையான விலைமனுக் கோரலுக்கு சென்றிருந்தால் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் சிறந்த தீர்மானத்தை எடுத்திருக்கலாம்.

விசா கட்டணம் குறித்து பரஸ்பர வேறுபாடுகள்
அத்துடன் விசா கட்டணம் குறித்து பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுகின்றன.ஒரு இடத்தில் 18.5 டொலர் என்றும் பிறிதொரு இடத்தில் 7.2 டொலர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இந்த செயற்திட்டம் 200 மில்லியன் டொலர் முதலீடு என்று அமைச்சரவை பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டது, ஆனால் முன்னெடுத்த அவதானிப்புக்களில் 200 மில்லியன் டொலர் அல்ல 200 மில்லியன் ரூபா என்று கூட குறிப்பிடப்படவில்லை.

தரவு கட்டமைப்பின் இரகசியத்தன்மையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு உண்டு.இருப்பினும் இரகசிய தரவுகள் எவ்வாறு வெளியானது என்பது சுட்டிக்காட்டப்பட்டது. தரவு கட்டமைப்பின் இரகசியத்தன்மையை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தினோம்.

கணக்காய்வு தலைமை அதிபதியினால் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தரவுகளை அடிப்படையாகக் கொண்டு விலை மனுக்கோரலை முழுமையாக தடயவியல் கணக்காய்வுக்கு உட்படுத்துமாறு பரிந்துரைத்துள்ளோம்.

2024 ஆம் ஆண்டு ஜூன் 04 ஆம் திகதி இடம்பெற்ற அரச நிதி தொடர்பான குழு கூட்டத்தில் கணக்காய்வு தலைமை அதிபதியினால் கணக்காய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே இந்த கணக்காய்வினை வெகுவிரைவில் நிறைவு செய்யுமாறு வலியுறுத்தியுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.