ஜனாதிபதி தேர்தல் 2024 : செவ்வாய்க்கிழமை தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு
ஜனாதிபதி தேர்தல் 2024 தொடர்பான விசேட அறிவிப்பினை எதிர்வரும் 16ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிடவுள்ளது. இந்த அறிவிப்பு அன்றைய தினம் முற்பகல் 10.30க்கு வெளியிடப்படவுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்தது.
அரசியமைப்புக்கு அமைய செவ்வாய்கிழமை (16) நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் ஜனாதிபதி தேர்தலுக்கான தினத்தை அறிவிப்பதற்கான அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடைக்கபெறுகிறது. அதே போன்று அரசியலமைப்புக்கு அமைய ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு முன்னர் புதிய ஜனாதிபதியின் பதவியேற்பு நிகழ்வுகளும் நிறைவடைந்திருக்க வேண்டும்.
அத்தோடு ஒக்டோபர் மாதத்தில் நாட்டில் இயற்கை அனர்த்தம் அல்லது ஏதேனும் திடீர் அனர்த்தங்கள் ஏற்பட்டால் மாத்திரம் ஒரு வாரத்துக்கு தேர்தலை ஒத்திவைப்பதற்கான அதிகாரம் ஆணைக்குழுவுக்கு உண்டு. அவ்வாறில்லை எனில் ஒக்டோபர் 12ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று முடிந்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறானதொரு நிலையில் செப்டெம்பர் மாத்துக்குள் தேர்தல் நடத்தப்பட்டால் சிறந்தது என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் உள்ளது. ஆனால், ஜனாதிபதி தேர்தல் குறித்து எந்த அறிவிப்பையும் ஜனாதிபதி ரணில் வெளியிட மாட்டார். அது முற்றுமுழுதாக தேர்தல் ஆணைக்குழுவுக்குரிய அதிகாரம் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
மேலும், தேர்தலில் களமிறங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை வற்புறுத்திக்கொண்டிருக்கின்றோம். இதுவரையில் அவர் போட்டியிடுவதாக உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அவர் அவ்வாறு அறிவித்தாலும் தற்போது ஜனாதிபதிக்குரிய வரப்பிரசாதங்களுக்கமைய உபயோகித்துக்கொண்டிருக்கும் உலங்கு வானூர்தி உள்ளிட்ட அனைத்தையும் கையளிக்கவும் நேரிடும். எனவே 16ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு பின்னரே எந்தவொரு உத்தியோகபூர்வ அறிவித்தலும் வெளியிடப்படும். அதுவரை அனைவரும் காத்திருக்க வேண்டும் என்றும் கூறினார்.