;
Athirady Tamil News

டொனால்டு ட்ரம்ப் மீதான தாக்குதல்… உலகத் தலைவர்கள் கண்டனம்

0

டொனால்டு டிரம்ப் மீதான கொலை முயற்சி தாக்குதலுக்கு உலகத் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தலைவர்கள் பலர் கண்டனம்
பென்சில்வேனியாவில் நடந்த தேர்தல் பரப்புரையின் போது டொனால்டு ட்ரம்ப் மீது கொலை முயற்சி நடத்தப்பட்டது. தாக்குதல்தாரி உளவுத்துறை அதிகாரிகளால் கொல்லப்பட்டுள்ள நிலையில், அவரது பெயர் உள்ளிட்ட தகவல்களும் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், ட்ரம்ப் மீதான தாக்குதலை உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பலர் கண்டித்துள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் António Guterres-ன் செய்தித் தொடர்பாளர் இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது அரசியல் வன்முறை என்றும் குறிப்பிட்டுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல் இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ளார்.

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவிக்கையில், நடந்த சம்பவம் பேரதிர்ச்சியை தருவதாகவும், எந்த வடிவத்திலும் அரசியல் வன்முறைக்கு நம் சமூகத்தில் இடமில்லை என குறிப்பிட்டுள்ள ஸ்டார்மர், இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவில் நலம்பெற வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.

ஜப்பானிய பிரதமர் Fumio Kishida தெரிவிக்கையில், ஜனநாயகத்திற்கு சவால் விடும் எந்தவொரு வன்முறைக்கும் எதிராக நாம் உறுதியாக நிற்க வேண்டும் என்றார். கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவிக்கையில், நடந்த சம்பவம் தம்மை பாதித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

அச்சத்துடன் கவனித்து வருவதாக
ட்ரம்ப் மீதான துப்பாக்கிச் சூடு தமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். டொனால்டு ட்ரம்பை மிக சமீபத்தில் சந்தித்துள்ள ஹங்கேரிய பிரதமர் விக்டர் ஓர்பன் தெரிவிக்கையில்,

இந்த நெருக்கடியான சூழலில் தமது பிரார்த்தனைகள் அனைத்தும் முன்னாள் ஜனாதிபதிக்கானது என்றார். இத்தாலியின் பிரதமர் Giorgia Meloni தெரிவிக்கையில், நடந்த சம்பவங்களை தாம் அச்சத்துடன் கவனித்து வருவதாகவும், ட்ரம்ப் விரைவில் குணமடைய தாம் வாழ்த்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா பிரதமர் நரேந்திர மோடி தெரிவிக்கையில், நடந்த சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாகவும். அரசியலிலும் ஜனநாயகத்திலும் வன்முறைக்கு இடமில்லை என்றும் மோடி தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.