இன்னும் 15 வருடங்களில் ஏற்படவுள்ள அபாயம் : மாற்றப்பட வேண்டிய முறைகளை அறிவிக்கும் ரணில்
நாட்டில் பல முறைமைகள் மாற்றப்பட வேண்டும். நாட்டின் இறக்குமதி பொருளாதாரத்தை ஏற்றுமதிப் பொருளாதாரமாக மாற்ற எதிர்பார்க்கிறோம் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் மத்திய மகா வித்தியாலயத்தில் நேற்று (13) நடைபெற்ற நவீன வசதிகளுடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நீச்சல் தடாகத்தை மாணவர்களுக்கு கையளிக்கும் நிகழ்விலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மீண்டும் பொருளாதார நெருக்கடி
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தற்போது பின்பற்றும் பொருளாதார முறைமைகள் மூலம் முன்னேற்றத்தை அடைய முடியாது. இதனால் ஒரு நாடு என்ற வகையில் மேலும் கடன் படுவதை மாத்திரமே செய்ய முடியும். அவ்வாறு செய்தால் இந்த பிள்ளைகள் எதிர்பார்க்கும் சிறந்த எதிர்காலமும் கிடைக்காது.
அதேபோல் இன்னும் 15 வருடங்களில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்படும். அதனால் நாடாக முன்னோக்கிச் செல்வதா? மீண்டும் பொருளாதாரம் சரிவடைய இடமளிப்பதா என்பதை தீர்மானிக்க வேண்டும்.
இங்கிருக்கும் பிள்ளைகள் இன்னும் 50 வருடங்களுக்கு மேலாக வாழப் போகிறீர்கள். அதனால் அரசாங்கம் என்ற வகையில் நாம் 2050 பற்றி சிந்திக்காமல் 2075 வரையில் தூர நோக்குடன் சிந்திக்க வேண்டியது அவசியம். அதனாலேயே நாட்டின் இறக்குமதி பொருளாதாரத்தை ஏற்றுமதிப் பொருளாதாரமாக மாற்ற எதிர்பார்க்கிறோம்.
நாட்டில் பல முறைமைகள் மாற்றப்பட வேண்டும். அதற்காகவே பொருளாதார மாற்றச் சட்டமூலம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்போது விவசாய நவீனமயம் திட்டம் மிக முக்கியமானது.
நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பும் இயலுமை விவசாயிகளுக்கே உள்ளது. அதற்காகவே அவர்களுக்குத் தேவையான உரத்தைப் பெற்றுக்கொடுக்க முதலில் நடவடிக்கை எடுத்தோம்.
விவசாயிகள் கடந்த 2022, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் நல்ல விளைச்சலை பெற்றுத்தந்தனர். அவர்களுக்கு நன்றி கூறும் வகையிலேயே ‘உறுமய’ தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் இலவச காணி உறுதிகள் வழங்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.