கொழும்பில் அனுமதியின்றி 99 வருட குத்தகைக்கு வழங்கப்பட்ட அரச காணி
கொழும்பில் (Colombo) அமைந்துள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான 06 ஏக்கர் காணி 2019 ஆம் ஆண்டு பணிப்பாளர் சபையின் அனுமதியின்றி 12 பில்லியன் ரூபாவுக்கு 99 வருட குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த விடயமானது நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன (Rohitha Abeygunawardana) தலைமையில் அண்மையில் கூடிய கோப் (COPE) குழுவிலேயே வெளிவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், அனுமதிக்கப்பட்ட குத்தகை ஒப்பந்தத்தின் நிபந்தனைகளுக்கு மேலதிகமாக பணிப்பாளர் சபையின் அனுமதியைப் பெறாது வேறு நிபந்தனைகள் அதில் உள்ளடக்கப்பட்டிருப்பதும் இங்கு புலப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒழுக்காற்று விசாரணை
எவ்வாறாயினும், குறித்த ஒப்பந்தத்தின் வரைபு தொடர்பில் சட்டப் பணிப்பாளருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை முன்னெடுக்கப்பட்டுவருவதாக கோப் குழு முன்னிலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த காணியை பணிப்பாளர் சபையின் உத்தியோகபூர்வ அனுமதியின்றி குத்தகைக்கு வழங்கியதன் காரணமாக அதிகாரசபைக்கு 330 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
அதனடிப்படையில், இந்த விவகாரங்கள் தொடர்பாக முறையான அறிக்கையை 2 வாரங்களுக்குள் குழுவுக்கு அனுப்பி வைக்குமாறும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.