முச்சக்கர வண்டி கட்டணங்கள் குறைப்பு
மேல் மாகாணத்தில் முச்சக்கரவண்டி கட்டணங்கள் குறைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.
கொழும்பில் இன்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அந்த சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர இது தொடர்பில் தெளிவுப்படுத்தினார்.
இந்த நிலையில் நாளை முதல் இந்தக் கட்டணக் குறைப்பு நடைமுறைக்கு வருகின்றது.
குறைக்கப்படும் கட்டணம்
இதன்படி, இரண்டாவது கிலோமீட்டருக்கு இதுவரை அறவிடப்பட்ட 100 ரூபா 90 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
மேல் மாகாணத்தில் முச்சக்கர வண்டியில் பயணிப்பவருக்கு முதல் கிலோமீட்டருக்கு அதிகபட்சமாக 100 ரூபா கட்டணம் அறவிடப்படும். இரண்டாவது கிலோ மீட்டருக்கு 90 ரூபா.
இரவு 10 மணி முதல் காலை 05 மணி வரை இந்தத் தொகையுடன் 15% சேர்க்கப்படும் என்று கூறப்பட்டது. அந்த கட்டணத்தை மீட்டரில் கணக்கிடுவதில் உள்ள சிரமங்கள் இருப்பினும், ஏதேனும் அநியாயம் நடந்தால், சரியான தகவல்களுடன் பொலிஸாருக்கும், பயணிகள் போக்குவரத்து ஆணைக்குழுவுக்கும், நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கும் பயணிகள் தகவல் தெரிவிக்கலாம்.
எனவே இந்த தொழிலில் ஈடுபடுவோர் நேர்மையுடன் செயற்பட வேண்டும் இல்லையேல் மக்களுக்கு முச்சக்கரவண்டி தேவை எவ்வளவு முக்கியமானதாக இருந்தாலும், அது டைனோசர் போல் அழிந்து போவதைத் தடுக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.