அமெரிக்காவில் அரசியல் வன்முறைக்கு இடமில்லை: டிரம்ப் மீதான தாக்குதலுக்கு பைடன் கண்டனம்
குடியரசு கட்சி வேட்பாளரும், அமெரிக்க முன்னாள் அதிபருமான டொனால்டு டிரம்ப் மீதான தாக்குதலுக்கு அந்நாட்டு ஜனாதிபதி ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் அரசியல் வன்முறைக்கு இடமில்லை என்று ஜோ பைடன் கூறியுள்ளார்.
பாதுகாப்பு அதிகாரிகளிடமிருந்து இருந்து இச்சம்பவம் குறித்து அறிந்ததும், இது சரியல்ல என்றும், கண்டிக்கத்தக்கது என்றும் கூறினார்.
விரைவில் டிரம்புடன் பேசுவேன் என்று கூறிய பைடன், அவர் பத்திரமாக இருப்பதை அறிந்து நிம்மதியடைந்ததாக கூறினார்.
மேலும், டிரம்பின் குடும்பத்தினர் மற்றும் பேரணியில் கலந்து கொண்ட அனைவரின் பாதுகாப்புக்காக பிரார்த்திக்கிறேன் என்று கூறினார்.
இதுபோன்ற சம்பவங்களை கண்டிப்பதில் முழு நாடும் ஒன்றிணைய வேண்டும் என்று பைடன் கூறினார்.
இதனிடையே, அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், டிரம்ப் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக நாட்டில் அரசியல் வன்முறைக்கு இடமில்லை என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா ட்வீட் செய்துள்ளார்.