ரூ.2 கோடி சம்பளத்தை உதறி விட்டு, தற்போது ரூ.8 கோடி சம்பாதிக்கும் பெண் – எப்படி தெரியுமா?
நிஷா ஷா என்ற பெண்ணுக்கு யூடியூபில் ரூ. 8 கோடி வருமானம் கிடைத்துள்ளது.
நிஷா ஷா
குஜராத்தை சேர்ந்த நிஷா ஷா என்ற பெண் லண்டனில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் கடந்த 9 ஆண்டுகளாக இணை இயக்குநராக பணியாற்றி வந்தார். அவருக்கு ஆண்டுக்கு ரூ. 2 கோடி சம்பளம் கிடைத்தாலும், அது அவருக்கு திருப்தியளிக்கவில்லை.
ஏற்கெனவே, அவருக்கு தெரிந்த நிதி ஆலோசனை தொடர்பாக யூடியூப்பில் ஆலோசனைகளை வழங்கி வந்தார். ஒரு கட்டத்தில் யூடியூப்பில் அதிக கவனம் செலுத்த முடிவு செய்த நிஷா, தனது வேலையை 2023-ம் ஆண்டு ராஜினாமா செய்தார். பின்னர், நிதி முதலீடு பற்றிய ஆலோசனைகளை தனது யூடியூப் சேனலில் வெளியிடத் தொடங்கினார்.
தனி நபர்கள் எதில் முதலீடு செய்யலாம், எதில் முதலீடு செய்தால் தொடர்ந்து சம்பாதிக்கலாம் போன்ற ஆலோசனைகளை வழங்கினார். இது குறித்து நிஷா கூறுகையில்,”நான் யூடியூப் சேனல் ஆரம்பித்து 11 மாதங்களில் 1000 வாடிக்கையாளர்கள் தான் இருந்தனர்.
அதிக வருமானம்
ஆனால், 2022-ல் வெளியிட்ட ஒரு வீடியோ எனது வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அந்த வீடியோ எனக்கு 50,000 வாடிக்கையாளர்களை தேடிக்கொடுத்ததுடன், ரூ. 3 லட்சம் வருமானத்தையும் ஈட்டித்தந்தது.
இதனால், யூடியூப்பில் முழு நேரம் கவனம் செலுத்த வேலையை ராஜினாமா செய்தேன். கடந்த ஆண்டு மே மாதம் முதல் இந்த ஆண்டு மே மாதம் வரை, யூடியூபில் ரூ. 8 கோடி வருமானம் கிடைத்துள்ளது. நான் சொந்தமாக நிதி தொடர்பாக வகுப்புகளும் எடுக்கிறேன். இந்த வருமானம், கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக உரையாற்றுவது என்று யூடியூபில் பல்வேறு வழிகளில் கிடைக்கிறது.
நான் வேலை செய்த போது கிடைத்த வருமானத்தைவிட இப்போது அதிகம் கிடைக்கிறது” என்று தெரிவித்துள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு யூடியூப் சேனல் ஆரம்பித்த நிஷாவிற்கு தற்போது 1 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர். அவரின் வீடியோவை யூடியூபில் சராசரியாக ஒரு லட்சத்திலிருந்து 9 மில்லியன் பேர் பார்க்கின்றனர். மேலும், அவர் கொடுக்கும் நிதி ஆலோசனைகள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது.