அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளி பெண்மணியின் கணவர்
அமெரிக்காவில் வரும் நவம்பா் மாதம் நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் அதிபர் ஜோ பைடனை எதிர்த்து முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு, தேர்தல் பிரசாரத்தின்போது டொனால்டு டிரம்ப் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த படுகொலை முயற்சியிலிருந்து டிரம்ப் தப்பியுள்ள நிலையில், தான் சார்ந்த குடியரசுக் கட்சியின் துணை அதிபராகப் போட்டியிடும் வேட்பாளரை திங்கள்கிழமை(ஜூலை 16) அறிவித்துள்ளார் டிரம்ப்.
டிரம்ப்பை அதிபா் வேட்பாளராக அதிகாரபூா்வமாக அறிவிப்பதற்கான குடியரசுக் கட்சி தேசிய மாநாடு விஸ்கான்சின் மாகாணம், மில்வாகீ நகரில் திங்கள்கிழமை தொடங்கியது. இந்த மாநாட்டில், வரும் அதிபா் தோ்தலில் குடியரசுக் கட்சி சாா்பில் துணை அதிபா் பதவிக்கு டிரம்ப்பின் தீவிர ஆதரவாளரும் அமெரிக்க நாடாளுமன்ற செனட் உறுப்பினருமான ஜே.டி. வேன்ஸ் துணை அதிபராகப் போட்டியிடுகிறார் என்பதை டிரம்ப் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், ஜே.டி. வேன்ஸ் துணை அதிபராக தேர்வாகும்பட்சத்தில், இந்தியா – அமெரிக்க இடையேயான உறவு வலுப்பட பேருதவியாக இருக்குமென்று டிரம்ப் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கான காரணம், ஜே.டி. வேன்ஸின் மனைவி உஷா சிலிகுரி இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட இந்திய வம்சாவளி பெண்மணி ஆவார்.
உஷாவின் பெற்றோர்கள் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தவர்கள். கலிபோர்னியாவின் சான் டீகோ பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வந்த உஷா, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தத்துவவியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர்.
அமெரிக்க உச்ச நீதிமன்ற வழக்குரைஞ்ரான உஷா, இடதுசாரி கொள்கைகளில் பிணைப்பு கொண்டவராவார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் குடியரசுக் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இதனிடையே, யேல் சட்டக் கல்லூரியில் தன்னுடன் பயின்ற ஜே.டி. வேன்ஸுடன் இவருக்கு காதல் மலர்ந்தது. இதனைத்தொடர்ந்து, இவர்கள் இருவரும் கடந்த 2014-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் ஹிந்து முறைப்படி நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது. வேன்ஸ் தம்பத்திக்கு இவான், விவேக், மிராபெல் ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.
ஜேம்ஸ் டேவிட் பௌமேன் என்ற ஜே.டி. வேன்ஸின்(38), தந்தை அவரது சிறுவயதிலேயே குடும்பத்தை விட்டுச் சென்ற நிலையில் தாயின் ஆதரவும் கிடைக்காததால் தனது தாத்தா பாட்டியால் வளர்க்கப்பட்டவர். கிறிஸ்தவ கத்தோலிக்க சமூகத்தை சார்ந்தவரான வேன்ஸ் வளர்ச்சிக்கு ஊக்கமளித்து முக்கிய பங்காற்றியவர் அவரது மனைவி உஷா.
அமெரிக்காவின் கிராமப் பகுதிகளில் நிறப் பாகுபாடு பிரச்னைகளுக்கு எதிராக வேன்ஸ் குரல் கொடுப்பதிலும், அவரது செல்வாக்கை அதிகரிக்கச் செய்வதிலும் உஷா முக்கிய பங்காற்றினார். உஷா அளித்த ஊக்கத்தால் ஹில்பில்லி எலெஜி நூலை எழுதினார் வேன்ஸ். கடந்த 2020-ஆம் ஆண்டு இந்நூலை தழுவி ரோன் ஹோவார்டு இயக்கத்தில் திரைப்படம் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.
ஹிந்து மத நம்பிக்கையே தனது வளர்ச்சிக்கொரு முக்கிய காரணமென குறிப்பிட்டுள்ளார் உஷா. அவர் அளித்துள்ள சமீபத்திய பேட்டியில் கூறியிருப்பதாவது, “என் பெற்றோர்கள் ஹிந்து மதத்தை சார்ந்தவர்கள். இதன் காரணமாக, அவர்கள் சிறந்த பெற்றோர்களாகவும், நல்ல மனிதர்களாகவும் இருக்க உதவியது. என்னுடைய சொந்த வாழ்க்கையிலும், இதன் ஆற்றலை உணர்கிறேன்.
நானும் எனது கணவரும் நிறைய பேசிக்கொள்கிறோம். இதன் காரணமாக, இரு வெவ்வேறு மத நம்பிக்கைகள் கொண்டிருந்தாலும் குழந்தைகளை ஒரே குடும்பமாக வளர்ப்பதில் சிரமப்படவில்லை” எனக் கூறியுள்ளார்.