;
Athirady Tamil News

நிலவில் முதன்முறையாக குகை ஒன்றைக் கண்டுபிடித்துள்ள அறிவியலாளர்கள்: மனிதர்கள் வாழ உதவலாம்

0

அறிவியலாளர்கள் முதன்முறையாக நிலவில் குகை ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார்கள். இந்தக் கண்டுபிடிப்பு, மனிதர்கள் நிலவில் வாழ வீடாக உதவக்கூடும் என நம்பப்படுகிறது.

நிலவில் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள குகை
பல நாடுகள், எப்படியாவது மனிதன் நிலவில் நிரந்தரமாக வாழ்வதற்கு வழிவகை செய்துவிடவேண்டும் என்பதற்காக பலவேறு முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றன.

ஆனால், நிலவில் தங்குபவர்கள், கதிர்வீச்சுகள், அதீத வெப்பநிலை மற்றும் விண்ணில் நிலவும் சீதோஷ்ணத்திலிருந்து பாதுகாக்கப்படவேண்டியது அவசியமாகிறது.

இப்படிப்பட்ட சூழலில், அறிவியலாளர்கள் முதன்முறையாக நிலவில் குகை ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார்கள்.

இத்தாலியிலுள்ள Trento பல்கலை அறிவியலாளர்களான Lorenzo Bruzzone மற்றும் Leonardo Carrer என்னும் அறிவியலாளர்கள் ரேடார் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தக் குகையைக் கண்டுபிடித்துள்ளார்கள்.

சுமார் 100 மீற்றர் ஆழம் கொண்ட இந்தக் குகை, மனிதர்கள் நிலவில் நிரந்தரமாக வாழ்வதற்கு தங்குமிடம் ஒன்றைக் கட்டுவதற்கு சரியான இடமாக அமையக்கூடும்.

இன்னொரு விடயம் என்னவென்றால், நிலவில் இதேபோல நிலப்பரப்புக்கு அடியில் நூற்றுக்கணக்கான குகைகள் இருக்கலாம் என்றும், அவற்றில் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள குகையும் ஒன்று என்றும் அறிவியலாளர்கள் கருதுகிறார்கள்.

பல மில்லியன் அல்லது பில்லியன் ஆண்டுகளுக்கு முன், நிலவில் எரிமலைக்குழம்பு வெளியேறியதால் இந்த குகை உருவாகியிருக்கக்கூடும் என்றும் அறிவியலாளர்கள் கருதுகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.