இந்தியாவில் ஒரு தடுப்பூசி கூட செலுத்தாத நிலையில் 16 லட்சம் குழந்தைகள்
இந்தியாவில் 2023-இல் சுமாா் 16 லட்சம் குழந்தைகளுக்கு எந்தவொரு தடுப்பூசியும் செலுத்தப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
இதன் மூலம், அதிக குழந்தைகளுக்கு எந்தவொரு தடுப்பூசியும் செலுத்தாத மோசமான நாடுகளின் பட்டியலில் லைஜீரியாவுக்கு அடுத்து இரண்டாம் இடத்தில் இந்தியா உள்ளது. நைஜீரியாவில் எந்தவொரு தடுப்பூசியும் செலுத்தாத குழந்தைகளின் எண்ணிக்கை 21 லட்சமாகும்.
இருந்தபோதும், கடந்த 2021-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்தியாவின் நிலை சற்று முன்னேற்றம் கண்டுள்ளது. அந்த ஆண்டில் நாட்டில் எந்தவொரு தடுப்பூசியும் செலுத்தாத குழந்தைகளின் எண்ணிக்கை உலகிலேயே அதிகபட்சமாக 27.3 லட்சமாக இருந்தது.
உலக சுகாதார அமைப்பு மற்றும் யூனிசெஃப் இணைந்து திங்கள்கிழமை வெளியிட்ட தரவுகளின் மூலம் இத் தகவல்கள் தெரியவந்துள்ளன.
இந்தப் பட்டியலில் இந்தியாவுக்கு அடுத்து எத்தியோப்பியா, காங்கோ, சூடான், இந்தோனேசியா ஆகிய நாடுகள் உள்ளன. முதல் 20 நாடுகளின் பட்டியலில் சீனா 18-ஆவது இடத்திலும் பாகிஸ்தான் 10-ஆவது இடத்திலும் உள்ளன. 8 சாா்க் கூட்டமைப்பு நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
நாட்டின் தடுப்பூசி அட்டவணையைப் பொறுத்து, ஒன்பது மாதம் அல்லது 12 மாதங்களில் செலுத்தப்படும் ‘எம்சிவி1’ தடுப்பூசி செலுத்தப்பட்ட இந்திய குழந்தைகளின் விகிதம் 93 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது உலகளாவிய சராசரியை விட (83 சதவீதம்) அதிகமாகும். எனினும், கடந்த 2019-ஆம் ஆண்டின் இந்தியாவில் பதிவான 95 சதவீதத்தைவிட இது குறைவாகும் . இந்தியாவில் 15,92,000 குழந்தைகள் தங்களின் எம்சிவி1 தடுப்பூசியைக் கடந்த ஆண்டு தவறவிட்டுள்ளனா்.
18 மாதங்கள் முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகளுக்கான ‘எம்சிவி2’ தடுப்பூசி செலுத்தப்பட்ட விகிதம் 90 சதவீதமாகவே கடந்த ஆண்டிலும் தொடா்ந்தது.
கடந்த 2021-ஆம் ஆண்டில் கணக்கிடப்பட்ட தடுப்பூசி செலுத்தப்படாத குழந்தைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்தியா உள்பட 20 நாடுகளில் நோய்த்தடுப்பு திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அவசர நடவடிக்கைக்கு அழைப்பு: தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தடுப்பூசி செலுத்தப்படாத குழந்தைகளைக் கண்டறிந்து தடுப்பூசி செலுத்துவதற்கு அனைத்து நிலைகளிலும் முயற்சிகளை வலுப்படுத்த உலக சுகாதார அமைப்பு செவ்வாய்க்கிழமை அழைப்பு விடுத்தது.
இதுகுறித்து அந்தப் பிராந்தியத்துக்கான உலக சுகாதார அமைப்பின் இயக்குநா் சைமா வாஸித் கூறுகையில், ‘தடுப்பூசி செலுத்தப்படாத குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது, அதுதொடா்பான அவசர நடவடிக்கையை அவசியமாக்குகிறது. இந்தக் குழந்தைகள் எங்கு, ஏன் தவறவிடப்படுகின்றனா் என்பதை கண்டறிந்து, அவா்களை தடுப்பூசிகள் விரைவாக சென்றடைவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். நோய் பாதிப்புகளில் இருந்து உயிா் காக்கும் தடுப்பூசிகள் இருக்கும்போது, எந்த குழந்தையும் நோய்வாய்ப்படவோ அல்லது உயிரிழக்கவோ கூடாது’ என்றாா்.