;
Athirady Tamil News

மின்கட்டண உயர்வுக்கு அவசியம் என்ன வந்தது.. இதுதான் திராவிட மாடலா? சீமான் கண்டனம்!

0

மின்கட்டணத்தை உயர்த்தும் திமுக அரசின் முடிவு கண்டனத்துக்குரியது என சீமான் தெரிவித்துள்ளார்.

சீமான் கண்டனம்
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு பேரிடியாக மின்கட்டணத்தை உயர்த்தும் திமுக அரசின் முடிவு வன்மையான கண்டனத்துக்குரியது.

ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக மின்கட்டணத்தை உயர்த்தி மக்களின் தலையில் தாங்க முடியாத சுமையை திமுக அரசு ஏற்றுவது வாக்களித்து அதிகாரத்தை வழங்கிய மக்களை வாட்டி வதைக்கும் கொடுங்கோன்மையாகும்.

திமுக அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள உயர்த்தப்பட்ட மின்கட்டண அறிவிப்பின்படி, பொதுமக்கள் 400 மின்அலகு வரை பயன்படுத்தும் வீடுகளுக்கு மின்அலகு ஒன்றுக்கு ரூ.4.60 காசுகள் வசூலிக்கப்பட்டு வந்த கட்டணம்,

மின்கட்டண உயர்வு
தற்போது ரூ.4.80 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், 401 மின்அலகு முதல் 1000 மின்அலகு வரையிலான வீடுகளுக்கான மின் கட்டணம் மின்அலகு ஒன்றிற்கு 50 காசுகள் வரை சீராக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான மின் கட்டணம் மின்அலகு ஒன்றுக்கு 40 காசுகளும்,

கிராமப்புற குடிசை வீடுகளுக்கான மின் கட்டணம் மின்அலகு ஒன்றுக்கு 45 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி வேளாண் மற்றும் அரசு விதைப்பண்ணைகள்,சிறு குறு தொழில்நிறுவனங்கள் மற்றும் ஏறத்தாழ 5 விழுக்காடு அளவிற்கு மின்கட்டணத்தை உயர்த்தியுள்ளது திமுக அரசு.

ஏற்கனவே, எரிபொருள் விலை உயர்வு, சொத்துவரி உயர்வு, சுங்க கட்டண உயர்வு என அடுத்தடுத்த விலை உயர்வால் ஏழை மக்கள் வாங்கும் திறனை முற்றிலும் இழந்து அல்லலுறும் நிலையில் தற்போது மின்கட்டணத்தையும் மீண்டும் உயர்த்தி இருக்கும் திமுக அரசின் சிறிதும் மனச்சான்றற்ற செயல் அப்பட்டமான கொடுங்கோன்மையாகும்.

திராவிட மாடலா?
கிராமப்புற குடிசை வீடுகளுக்கும், வேளாண்மைக்கும், விதை பண்ணைக்கும் மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? இதுதான் திராவிட மாடலா? அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான மின்கட்டணத்தை திமுக அரசு அதிகரித்திருப்பது சென்னை போன்ற பெருநகரங்களில்

வாடகை வீடுகளில் வசிப்போருக்கு மிகப்பெரிய நிதிச்சுமையை ஏற்படுத்தும். மக்களை வாட்டிவதைக்கும் வகையில் உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டண உயர்வை திமுக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், சட்டமன்றப் தேர்தலின்போது திமுக தனது தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி, மின்கட்டணத்தை இரண்டு மாதத்திற்கு ஒருமுறை கணக்கிடும் முறையைக் கைவிட்டு, ஒவ்வொரு மாதமும் கட்டணம் செலுத்தும் முறையை விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டுமென வலியுறுத்துகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.