இலங்கையில் இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த பெண் மருத்துவர்!
மாதம்பே – கலஹிட்டியாவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் சிலாபம் வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த நாத்தன்டியா துங்கன்னாவ பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய செபாலிகா வனமாலி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 04-07-2024 ஆம் திகதி காலை சிலாபம் – கொழும்பு வீதியில் தேவாலா சந்தியில் இருந்து சிலாபம் திசை நோக்கிச் பயணித்த இ.போ சபைக்கு சொந்தமான பேருந்து வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் புத்தளம் திசை நோக்கிச் சென்ற சீமெந்து லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் சுமார் 27 பேர் காயமடைந்து சிலாபம் பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
பொறியியலாளரான தனது கணவருடன் தனது பிள்ளையை பாடசாலைக்கு அழைத்துச் செல்வதற்காக தேவாலா சந்தி வரை பயணிப்பதற்காக குறித்த மருத்துவர் வென்னப்புவ பகுதியில் இருந்து பேருந்தில் ஏறியுள்ளார்.
பின்னர் கணவர் பேருந்தில் இருந்து இறங்கி நாத்தாண்டிய துங்கன்னாவ பகுதியில் உள்ள வீட்டிற்கு சென்றுள்ளார்.
மருத்துவர் அதே பேருந்தில் சிலாபம் பொது மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்த போதே துரதிஷ்டவசமாக விபத்துக்குள்ளானார்.
படுகாயமடைந்த மருத்துவர், சிலாபம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், காயமடைந்தவர்களில் இருந்த அவரது நண்பியை காப்பாற்ற சக மருத்துவர்கள் கடுமையாக போராடினர்.
ஆனால் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால், அவர் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் பல அறுவை சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டும் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.