டொனால்ட் ட்ரம்பை கொலை செய்ய முயற்சி: பின்னணியில் ஈரான்
அமெரிக்காவின் (America) முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பை (Donald Trump) கொலை செய்வதற்கு ஈரான் (Iran) தரப்பில் சதித்திட்டம் இடம்பெறுவதாகக் கிடைக்க பெற்ற தகவலை அடுத்து அவரது பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பல வாரங்களுக்கு முன்னரே இந்த பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்க தேசியப் பாதுகாப்பு அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
அதேவேளை, கடந்த சனிக்கிழமை ட்ரம்பை இலக்கு வைத்து பென்சில்வேனியாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கும் ஈரானுக்கும் தொடர்பில்லை என ஈரான் அரசு அறிவித்துள்ளது.
ஈரானிய அச்சுறுத்தல்
இருப்பினும், அன்றையதினம் துப்பாக்கிச் சூட்டை நடத்திய 20 வயதான சந்தேக நபரால் எவ்வாறு ட்ரம்ப்பை நெருங்க முடிந்தது என்பது தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
ஈரானிய அச்சுறுத்தல் தொடர்பில் அமெரிக்க இரகசிய புலனாய்வு சேவை முன்னதாக டொனால்ட் ட்ரம்பிற்கு அறியப்படுத்தி இருந்தது. இதனையடுத்தே, அவருக்கான பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டதாக அமெரிக்க தேசியப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2020ஆம் ஆண்டு ஈராக்கில் நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் ஈரானின் படை பிரிவொன்றின் தளபதி காசிம் சுலைமானி (Qasem Sulaimani) கொல்லப்பட்டார்.
இந்தத் தாக்குதலுக்கு உத்தரவிட்டமைக்காக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டரம்ப் மற்றும் முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் மைக் போம்பியோ ஆகியோருக்கு எதிராக ஈரானிய அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.