டொனால்டு ட்ரம்பை சுட்ட நபர்…. பிரித்தானிய அரச குடும்பம் குறித்தும் தேடியுள்ளார்: வெளிவரும் புதிய தகவல்
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பை படுகொலை செய்ய முயன்ற நபர், பிரித்தானிய அரச குடும்பம் தொடர்பிலும் விரிவாக ஆய்வு செய்துள்ளதாக விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
அரச குடும்பத்து உறுப்பினர்
டொனால்டு ட்ரம்பை கொல்ல முயன்ற 20 வயதான தாமஸ் க்ரூக்ஸ், இணையத்தில் தமது இலக்கு தொடர்பில் விரிவாக ஆய்வு செய்துள்ளார். தமது தாக்குதல் குறித்து பல்வேறு தரவுகளை அவர் இணையத்தில் தேடியுள்ளார்.
டொனால்டு ட்ரம்ப் தொடர்புடைய தாக்குதலில் நொடியிடையில் தப்பியிருந்தார். இந்த வழக்கில் தற்போது அதிர்ச்சி திருப்பமாக, FBI அதிகாரிகள் பகீர் தகவல் ஒன்றை வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளனர்.
தாமஸ் க்ரூக்ஸ் பயன்படுத்தியுள்ள அலைபேசி உள்ளிட்ட சாதனங்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில், பெயர் குறிப்பிடாத பிரித்தானிய அரச குடும்பத்து உறுப்பினர் குறித்தும் விரிவாக ஆய்வு செய்துள்ளது அம்பலமாகியுள்ளது.
மட்டுமின்றி, டொனால்டு ட்ரம்ப், ஜோ பைடன் உள்ளிட்டவர்களின் புகைப்படங்களும், சிகாகோவில் நடக்கவிருக்கும் ஜனநாயக தேசிய மாநாட்டிற்கான முக்கிய திகதிகள் உள்ளிட்ட தரவுகளும் அவர் பதிவு செய்து வைத்திருந்துள்ளார்.
மட்டுமின்றி, சம்பவத்தன்று ட்ரம்ப் மேடையேறும் ஒருமணி நேரத்திற்கு முன்னர், சந்தேகத்திற்கு இடமளிக்கும் நடமாட்டம் தொடர்பில் உளவுத்துறை எச்சரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்
ட்ரம்ப் மேடையேறிய சில நிமிடங்களில், அருகாமையில் அமைந்துள்ள கட்டிடத்தின் கூரையில் இருந்து க்ரூக்ஸ் தொடர்ச்சியாக துப்பாக்கியால் சுட்டுள்ளான். சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு அதிகாரிகள், திருப்பித் தாக்கியதில் சம்பவயிடத்திலேயே க்ரூக்ஸ் கொல்லப்பட்டான்.
க்ரூக்ஸ் சுட்டதில், டொனால்டு ட்ரம்ப் லேசான காயங்களுடன் தப்பியிருந்தாலும், அவரது கூட்டத்தில் கலந்துகொண்ட நபர் ஒருவர் கொல்லப்பட்டதுடன், இருவர் படுகாயமடைந்தனர்.
ட்ரம்ப் மீதான தாக்குதலுக்கு சில நிமிடங்கள் முன்னர் உள்ளூர் பொலிசாருக்கும் தாக்குதல்தாரிக்கும் இடையே வாக்குவாதமும் ஏற்பட்டுள்ளது. ட்ரம்ப் உரையாற்றிய மேடைக்கும் க்ரூக்ஸ் காத்திருந்த கட்டிடத்திற்கும் இடையே 425 அடி தூரமே இருந்துள்ளது.
மட்டுமின்றி, க்ரூக்ஸ் தாக்குதலுக்கு பயன்படுத்திய அந்த கட்டிடமானது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என அதிகாரிகளால் அடையாளப்படுத்தப்பட்ட இடம் என்றும் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.