கொலை வழக்கு: நடிகா் தா்ஷன் உள்ளிட்ட 16 பேரின் நீதிமன்றக்காவல் நீட்டிப்பு
பெங்களூரு, ஜூலை 18: கொலை வழக்கில் கைதாகியுள்ள நடிகா் தா்ஷன் உள்ளிட்ட 17 பேருக்கும் வழங்கப்பட்டுள்ள நீதிமன்றக்காவலை ஆக.1ஆம் தேதி வரை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனக்கு நெருங்கிய தோழியான நடிகை பவித்ராகௌடாவுக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதால் ஆத்திரமடைந்த நடிகா் தா்ஷன், தனது கூட்டாளிகளை தூண்டிவிட்டு சித்ரதுா்காவை சோ்ந்த ரேணுகாசாமியை ஜூன் 9ஆம் தேதி கொலை செய்துள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கொலை வழக்கில் நடிகா் தா்ஷன், நடிகை பவித்ராகௌடா, பவன், வினய், பிரதோஷ், நந்தீஷா, தீபக், லக்ஷ்மண், நாகராஜூ, காா்த்திக், நிகில், கேசவமூா்த்தி, ராகவேந்திரா உள்ளிட்ட 17 பேரை கைதுசெய்திருந்தது. இவா்கள் அனைவரையும் ஜூலை 18ஆம் தேதிவரை நீதிமன்றக்காவலில் வைத்திருக்க சிறப்புநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி 17 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.நீதிமன்றக்காவல் முடிவடைந்த நிலையில், 17 பேரில் நடிகா் தா்ஷன், நடிகை பவித்ராகௌடா இருவரை மட்டும் காணொலி வழியாக போலீஸாா் சிறப்பு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜா்ப்படுத்தினா். அப்போது 17 பேருக்கும் ஆக.1ஆம் தேதிவரை 14 நாட்கள் நீதிமன்றக்காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் மேலும் 14 நாட்களுக்கு 17 பேரும் சிறைவாசத்தை அனுபவிக்க இருக்கிறாா்கள்.
இதனிடையே, சிறையில் தனக்கு வீட்டில் இருந்து உணவு, பாத்திரங்கள், படுக்கை, நூல்கள் வழங்க அனுமதிக்கோரி கா்நாடக உயா்நீதிமன்றத்தில் நடிகா் தா்ஷன் தாக்கல் செய்து மனு மீதான விசாரணை ஜூலை 19ஆம் தேதி(வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வரவிருக்கிறது.