கிளிநொச்சியில் மாதிரி கிராம திட்டத்தினை நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்
கிளிநொச்சி மாவட்டத்தில் மாதிரி கிராம அபிவிருத்தி திட்டத்தினை நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் நேற்று(18) வியாழக்கிழமை நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடல், கிளிநொச்சி உதவி மாவட்ட செயலாளர் ஹ.சத்தியஜீவிதா அவர்களின் தலைமையில் மாவட்ட திறன் விருத்தி மண்டபத்தில் நடைபெற்றது.
மாவட்ட செயலக கிறிஸ்தவ கலாச்சார பிரிவின் ஏற்பாட்டில் RAHAMA நிறுவனத்தின் நிதி அனுசரனையில் இப் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்டத்தில் நான்கு பிரதேச செயலர் பிரிவுகளிலிருந்தும் தெரிவு செய்யப்படும் கிராமங்களில் போதை ஒழிப்பு, கலை, விளையாட்டு, ஆயுர்வேத வைத்தியம், இளைஞர் குழுக்களின் உருவாக்கம், அபிவிருத்தி புனரமைப்பு பணிகள், மனநிலை மாற்றம், போன்ற பல்வேறு விடயங்களை கிராம மட்டத்தில் உருவாக்குவதற்கான முன்னாயத்த கலந்துரையாடலாக இது அமைந்திருந்தது.
இதன்போது கிராம மட்டத்திலான போதைப்பொருள் தடுப்பு செயற்திட்டத்தின் முக்கியத்துவம், நிலைபேறான செயற்திட்டத்தின் முக்கியத்துவம், கிராம மட்டங்களில் ஆரம்ப மதிப்பீடுகள் மேற்கொள்வதற்கான நுட்பங்கள், வழிமுறைகள், கிராம அபிவிருத்தியில் போதைப்பொருள் பாவனையின் ஆதிக்கம், கிராமிய தகவல்களை திரட்டிக்கொள்ளல், ஆரம்ப கட்ட செயற்பாட்டினை திட்டமிடல் என்பன தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டன.
கிளிநொச்சி மாவட்டத்தில் கிராம மட்டத்திலான போதைப்பொருள் தடுப்பு செயற்றிட்டத்தினை வலுவூட்டும் வகையில் பயிற்றுவிப்பாளர்களை பயிற்றுவித்தல் செயலமர்வு கடந்த மாதம் இரு தினங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந் நிகழ்வில் மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலகங்களின் கலாசார உத்தியோகத்தர்கள், இந்து கலாசார உத்தியோகத்தர்கள், சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள், கிறிஸ்தவ கலாசார உத்தியோகத்தர்கள், தேசிய இளைஞர் சேவை மன்ற உத்தியோகத்தர்கள், போதை ஒழிப்பு சார்ந்து பணியாற்றும் உத்தியோகத்தர்கள், உள வள ஆற்றுப்படுத்துனர்கள், கிராம மட்ட உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.