வங்கதேச வன்முறை: 39ஆக உயர்ந்த பலி!
வங்கதேசத்தில் இட ஒதுக்கீடு முறைக்கு எதிரான மாணவர்கள் போராட்டம் வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.
வங்கதேசத்தில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3,000 அரசுப் பணிகளுக்கு 4,00,000 பட்டதாரிகள் விண்ணப்பிக்கின்றனர். இதில், 1971-ஆம் ஆண்டு விடுதலைப் போரில் பங்கேற்ற வீரர்களின் வம்சாவழியினருக்கு 30 சதவீதமும், பின்தங்கிய மாவட்டங்களுக்கும், பெண்களுக்கும் தலா 10 சதவீதமும், சிறுபான்மை இனத்தவருக்கு 5 சதவீதமும் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 1 சதவீதமும் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், நாட்டின் உயர்நிலை அரசுப் பணிகளுக்கு தகுதியுள்ள மாணவர்கள் பணியமர்த்தப்படுவதை தற்போதுள்ள இந்த இட ஒதுக்கீட்டு முறை தடுப்பதாகவும், இட ஒதுக்கீட்டில் சீர்திருத்தங்கள் கோரியும் மாணவர்கள் நடத்தி வந்த நாடு தழுவிய போராட்டத்தில் திங்கள்கிழமை வன்முறை வெடித்தது.
வங்கதேசத்தில் வன்முறை
அமைதியாக நடத்தப்பட்ட போராட்டத்தின் மீது நாட்டில் ஆளும் அவாமி கட்சியின் மாணவர் அணி காவல்துறை உதவியுடன் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து வெடித்த வன்முறையில் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளதாகவும், பலர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
வன்முறை காரணமாக நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் காலவரையின்றி மூடப்பட்டன. நாட்டில் நிலவும் சூழலைக் கருத்தில் கொண்டு வங்கதேசத்தில் உள்ள இந்திய சமூகத்தினர் மற்றும் மாணவர்கள் தங்கள் வளாகத்தை விட்டு வெளியே செல்வதைத் தவிர்க்குமாறு டாக்காவில் உள்ள இந்தியத் தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும், நாட்டு மக்கள் அமைதி காக்குமாறு அந்நாட்டுப் பிரதமர் ஷேக் ஹசீனா வேண்டுகோள் விடுத்துள்ளார்.